என் மலர்
நீங்கள் தேடியது "bought a place"
- கீழ்புத்துப்பட்டில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது.
- இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை அடுத்த தமிழகப் பகுதியான கீழ்புத்துப்பட்டில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது.
1990-ம் ஆண்டு இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்தவர்கள் கீழ் புத்துப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருகின்றனர்.
தற்போது முகாமில் 1,358 இலங்கை அகதிகள் உள்ளனர். அரசு சார்பில் அவர்களுக்கு சீட் போட்ட வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. தற்போது ஆட்சியில் ரூ.23 கோடி மதிப்பில் அங்கு 440 தனித்தனி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இந்தியாவுக்குள் அகதிகளாக வருபவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை மட்டுமே வழங்கப்படுகிறது. ஆதார் குடியுரிமை சான்றில் சேராது. மற்ற சலுகைகளை மாநில அரசு செய்து வருகிறது.
முகாமில் இருக்கும் இலங்கைத் தமிழர்கள் எங்கு வேண்டு மானாலும் பணியாற்றலாம் எந்த தடையும் இல்லை. தமிழகத்திற்கு குடியரசுத் தலைவர் பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரும் நாட்களில் மட்டும் முகாமில் உள்ளவர்கள் எண்ணப்படுவது வழக்கம். ஆனால் அவர்களுக்கு இந்திய நாட்டுக்குள் அசையா சொத்து வாங்குவதற்கு அதிகாரம் இல்லாமல் உள்ளது.
அப்படி அவர்கள் வாங்கினால் அது குற்றமாக கருதப்படுகிறது. இந்நிலையில் 1990-ம் ஆண்டு இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்து கீழ்புத்துப்பட்டு முகாமில் வசிக்கும் ஒருவர் கீழ்புத்துப்பட்டு அருகே உள்ள கங்கை நகர் அமீன் வீதியில் பல லட்சம் மதிப்பில் இடம் வாங்கியதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து சென்னையிலிருந்து வந்த கியூ பிரிவு போலீஸ் அதிகாரிகள் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக வருவாய்த் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இடம் வாங்கிய இலங்கை அகதியின் மகன் ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் அவருடைய பெயரில் இங்கு நிலம் வாங்கி அங்கு வீடு கட்டி வருவதும் தெரியவந்தது.
இதுகுறித்து கியூ பிரிவு போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். 1990 முதல் இதுவரை இலங்கை அகதிகள் சொத்து வாங்கியதாக எழுந்த புகாரில் மரக்காணம் வானூர் சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பதியப்பட்ட 15-க்கும் மேற்பட்ட பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள தாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.






