திருநள்ளாறு கோவிலில் நாளை சனிப்பெயர்ச்சி விழா- பக்தர்கள் குவிய தொடங்கினர்

3 வகையான கட்டண தரிசனத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருநள்ளாறு கோவிலில் நாளை சனிப்பெயர்ச்சி விழா- பக்தர்கள் குவிய தொடங்கினர்
Published on

புதுவை மாநிலம் காரைக்கால் பிராந்தியம் திருநள்ளாறில் உலக பிரசித்திப் பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனீஸ்வர பகவான் கிழக்கு நோக்கி தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம்.

மேலும் சனீஸ்வர பகவான் கோவிலில் 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும். தற்போது நாளை (வெள்ளிக்கிழமை) சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. இதையொட்டி காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்கிறார்.

விழா ஏற்பாடுகளை காரைக்கால் மாவட்ட கலெக்டர் இஷிதா ரதி, கோவில் நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனைகள் நடைபெறுகிறது.

பக்தர்கள் நெரிசலின்றி தரிசனம் செய்ய, தேவஸ்தான நிர்வாகம் இலவச தரிசனம் மற்றும் 3 வகையான கட்டண தரிசனத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, இலவச தரிசன வரிசை, கட்டணம் செலுத்தும் சிறப்பு தரிசன வரிசையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் சிரமமின்றி டிக்கெட்டுகள் பெறுவதற்காக, 15 இடங்களில் டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிக அளவில் பக்தர்கள் வருவதை கருத்தில் கொண்டு சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நளன் குளத்தில் அனைத்து பக்தர்களும் சவுகரியமாக நீராடும் வகையில், குளம் முழுமையாக சீரமைக்கப்பட்டு புதிய நீர் நிரப்பப்பட்டுள்ளது.

மேலும் விழாவுக்கு இலவச கட்டுப்பாட்டு அறை எண்களாக 1070 மற்றும் 1077 செயல்பட்டு வருகிறது. அவசர உதவிக்கு 83002-61071 என்ற செல்போன் எண்ணை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நாளை சனிப்பெயர்ச்சி விழா நடைபெற இருப்பதை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு பக்தர்கள் வந்து குவிய தொடங்கியுள்ளனர். அங்குள்ள தங்கும் விடுதிகளும் நிரம்பி வருகிறது.

கோவிலுக்கு அதிகளவு பக்தர்கள் வருவதால் கோவில் மற்றும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com