முருகனின் வேலால் தோன்றிய ஊற்று

குழியிலிருந்து ஊற்றுத் தோன்றியதால் இவ்வூர் ஊற்றுக்குழி எனப்பெயர் பெற்றது. கதித்தமலையே ஓர் அழகிய மயில் வடிவில் தான் உள்ளது.
முருகனின் வேலால் தோன்றிய ஊற்று
Published on

சிவபெருமான், அகத்தியர், அருணகிரிநாதர் ஆகிய மூவரும் முருகப்பெருமானிடம் உபதேசம் பெற்றவர்கள் ஆவர். அகத்தியர் முருகப்பெருமான் குடிகொண்டுள்ள தலங்களுக்கெல்லாம் யாத்திரை சென்றார். அப்போது கதித்தமலையான இப்பகுதியில் தவம் இயற்ற விரும்பி முயற்சித்த போது, நீர் நிலை இல்லாமல் தவித்தார்.

உடனே முருகப்பெருமானை வேண்ட, அகத்தியரின் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்த முருகப்பெருமான், மலையில் தம் வெற்றிவேலினை ஊன்றி, ஒரு வற்றாத ஊற்றை ஏற்படுத்தினார். அந்த ஊற்றிலிருந்து நீர் பொங்கிப் பெருகியது. மகிழ்வுற்ற அகத்தியர் அனுட்டானங்களை எல்லாம் முடித்து வழிபாடும் மிகச் சிறப்புடன் செய்தார். அன்று முருகப்பெருமான் கூர் வேலினால் ஏற்படுத்திய அவ்வூற்று இன்றும் நம் கண் முன் வற்றாமல், வளமாக உள்ளது. குழியிலிருந்து ஊற்றுத் தோன்றியதால் இவ்வூர் ஊற்றுக்குழி எனப்பெயர் பெற்றது.

இன்று அது மருவி ஊத்துக்குளி என்றாயிற்று. கதித்தமலையே ஓர் அழகிய மயில் வடிவில் தான் உள்ளது. மயிலுக்கு "மயூரம்" என்ற மற்றொரு பெயரும் உண்டு. கதித்தமலையை "மயூர கிரி" என்றும் அழைப்பர். "கதித்தமலைக் கவியமுதம்" என்ற நூல் மூலம் சண்முகசுந்தரக் கவிராயரும், "கதித்தமலைப்பிள்ளைத்தமிழ்" என்ற நூல் வழி சோமசுந்தரம் பிள்ளையும், "கதித்தமலைப் பதிகம்" என்ற கவிதை நூல் மூலம் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளும், நம் கதித்தமலையின் பேரரும் சிறப்புகளை எல்லாம் பெரிதும் வியந்து போற்றிப் பாராட்டி உள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com