என் மலர்
புதுச்சேரி

ஊசி
தவறான ஊசி செலுத்தியதால் பெண் பரிதாப சாவு
- தவளக்குப்பம் அருகே தவறான ஊசி செலுத்தியதில் பெண் பரிதாபமாக இறந்து போனார்.
- இதில் மணிக்கட்டு அருகில் வெட்டுபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது.
புதுச்சேரி:
தவளக்குப்பம் அருகே தவறான ஊசி செலுத்தியதில் பெண் பரிதாபமாக இறந்து போனார்.
தவளக்குப்பம் அருகே நல்லவாடு ரோடு பிள்ளை யார் திட்டு பகுதியை சேர்ந்தவர் தேவநாதன். விவசாயி. இவரது மனைவி கவிதா (வயது45). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு கவிதா புல் நறுக்கும் எந்திரத்தில் புல் அறுத்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எந்திரத்தில் அவரது வலது கை சிக்சிக்கொண்டது. இதில் மணிக்கட்டு அருகில் வெட்டுபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் லாஸ்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவரது கையில் பிளேட் பொறுத்தப்பட்டது. ஒரு வருடம் கழித்து கையில் பொறுத்தியிருந்த பிளேட்டை அகற்ற வேண்டும் என்று டாக்டர்
கள் அப்போது அறிவுறுத்தியிருந்தனர்.
அதன்படி கடந்த 20-ந் தேதி கையில் பொறுத்தப்பட்ட பிளேட்டை அகற்ற கவிதா ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
22-ந் தேதி அறுவை சிகிச்சை செய்து கையில் இருந்த பிளேட்டு அகற்றப்பட்டு 24-ந் தேதி கவிதா ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
வீட்டில் ஓய்வில் இருந்து வந்த கவிதாவுக்கு நேற்று காலை கையில் வலி அதிகம் ஏற்பட்டது. உடனே அவரது தாயார் வசந்தா ஜிப்மர் ஆஸ்பத்திரியில் எழுதி கொடுத்த மருந்து சீட்டை எடுத்து சென்று ஜிப்மர் பார்மசியில் ஊசி மருந்து வாங்கி கொண்டு வந்தார்.
பின்னர் கவிதாவை தானம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கிளினீக் அழைத்து சென்று தான் வாங்கி வந்த ஊசி மருந்தை டாக்டரிடம் கொடுத்து கவிதாவுக்கு செலுத்தினார். ஊசி போட்ட சிறிது நேரத்தில் கவிதா மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த டாக்டர் உடனே கவிதாவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினார்.
இதையடுத்து அங்கிருந்த ஆட்டோ மூலம் கவிதாவை தவளக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கவிதாவை கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கவிதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அப்போது டாக்டர்கள் விசாரித்த போது கவிதாவுக்கு செலுத்தப்பட்ட ஊசி மருந்தை உறவினர்கள் காண்பித்தனர். அதனை பார்த்த டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
வலிக்கு நிவாரணம் அளிக்கும் ஊசி மருந்துக்கு பதிலாக அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு செலுத்தப்படும் ஊசியை கவிதாவுக்கு செலுத்தியதால் அவர் இறந்து போனது தெரியவந்தது.
இதையடுத்து கவிதாவின் கணவர் தேவநாதன் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனியார் கிளினீக் டாக்டர் நாங்கள் வாங்கி கொடுத்த ஊசி மருந்தை சரியாக படித்து பார்க்காமல் கவனக்குறைவாக தனது மனைவி கவிதாவுக்கு செலுத்தியதால் மரணம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






