search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
    X

    சாலை மறியல் காரணமாக கல்லூரி-பள்ளி வாகனங்கள் அணிவகுத்து நின்ற காட்சி.

    கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

    • 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
    • திடீர் சாலைமறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழி சாலை பணி நடைபெற்று தற்போது 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது.

    இந்நிலையில் 4 வழி சாலைக்கு அருகாமையில் மதகடிப்பட்டு அருகே தமிழக பகுதியான எல்.ஆர். பாளையம் கிராமம் உள்ளது. இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    மேலும் இந்த வழியாகவே பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலை உள்ளது.

    இந்த சாலை விழுப்புரம்- புதுச்சேரி 4 வழி சாலையில் வந்து இணைகிறது. இந்த சாலைக்கு எதிர்புறம் தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் பள்ளி என கல்வி நிறுவனங்கள் உள்ளன.

    பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இந்த சாலையை கடந்தே மறு முனைக்கு செல்ல வேண்டும்.

    மேலும் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக செல்வோரும் இந்த சாலையைத்தான் கடந்து செல்ல வேண்டும். ஆனால் நெடுஞ்சாலை பணி யாளர்கள் 2 சாலைகளின் குறுக்கே இரும்பு கேட்டுகள் அமைத்து ஒரு புறத்திலிருந்து மறுபுறம் நடந்து கூட செல்லாத அளவிற்கு தடுப்பு அமைத்துள்ளனர்.

    இதனால் எல்.ஆர். பாளையம் பகுதியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் பொது மக்களும் அப்பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுங்க சாவடியை தாண்டி கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இதனால் பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை விழுப்புரம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் மதகடிப்பட்டு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தங்கள் பகுதியில் இருந்து எதிரே உள்ள சாலைக்கு செல்வதற்கு எந்த இடை யூறும் இல்லாமல் பாதை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த மறியல் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. ஆனால் போலீசாரோ அதிகாரிகளோ அப்பகுதிக்கு வராததால் பொதுமக்கள் ஆவேசம் அடைந்தனர்.

    அதன் பின்னர் தகவல் அறிந்த திருபுவனை போலீசார் மற்றும் வளவனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.உடனடியாக அப்பகுதியில் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரி யிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த திடீர் சாலைமறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் காலை நேரம் என்பதால் கல்லூரி-பள்ளி வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து காலதாமதமாக சென்றனர்.

    Next Story
    ×