என் மலர்
புதுச்சேரி

பிள்ளைச் சாவடி மீனவ கிராமத்தில் கடல் சீற்றத்தால் படகு-வலை கடலில் இழுத்து செல்லப்பட்டதை பார்வையிட்ட காட்சி.
கடல் சீற்றத்தால் படகு-வலை கடலில் இழுத்து செல்லப்பட்டது
- புதுவை மற்றும் அதனை சுற்றியுள்ள கோட்டகுப்பம், வானூர் பகுதிகளில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்தது.
- பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு ஏற்பட்ட நிலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடற்கரையில் படகுகளை மீனவர்கள் நிறுத்தி இருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை மற்றும் அதனை சுற்றியுள்ள கோட்டகுப்பம், வானூர் பகுதிகளில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்தது.
இதனால் கடல் சீற்றம் ஏற்பட்டது. தமிழக பகுதியான பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டு சுமார் 50 மீட்டர் அளவிற்கு கடல் நீர் கிராமத்திற்குள் புகுந்துள்ளது.
இதனால் அந்த கிராமத்தில் இருந்த கட்டிட காம்பவுண்ட் சுர்கள், வீடுகள் சுடுகாட்டு சாலை மற்றும் புதிதாக கட்டப்பட்ட சுடுகாடு ஆகியவை கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டது.
பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு ஏற்பட்ட நிலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடற்கரையில் படகுகளை மீனவர்கள் நிறுத்தி இருந்தனர். கடல் சீற்றத்தால் கரையில் நிறுத்தி இருந்த வல்லத்தான் என்பவருடைய மீன்பிடி படகு எஞ்சினுடன் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டது.
மாதவன் என்பவருடைய மீன் வலையும் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட படகுகள் லேசாக சேதமடைந்தன.
இதுகுறித்து மீனவர்கள் மீன்வளத் துறை அதிகாரிக்கு புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விழுப்புரம் மாவட்ட மீனவர் மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் நித்திய பிரியதர்ஷினி தலைமையில் சார் ஆய்வாளர் பெருமாள், மரைன் பிரிவு உதவி ஆய்வாளர் சந்துரு, ஆகியோர் பிள்ளைச்சாவடி மீனவ கிராமம், கோட்டகுப்பம், தந்திராயன்குப்பம் ஆகிய பகுதிகளில் கடல் சீற்றத்தையும் அதனால் ஏற்பட்ட சேதத்தையும் ஆய்வு செய்தனர்.
கடல் கொந்தளிப்பு காரணமாக கடந்த 4 நாட்களாக மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






