search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கோவில் நிலமோசடி வழக்கு- புதுச்சேரி அரசு அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்டு
    X

    கோவில் நிலமோசடி வழக்கு- புதுச்சேரி அரசு அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்டு

    • போலி ஆவணத்தை பதிவு செய்த சார் பதிவாளர் சிவசாமி கடந்த 20-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
    • போலி பத்திரம் பதிவு செய்தபோது பதிவுத்துறை இயக்குனராக இருந்த ரமேஷ், புதுவை பதிவாளராக இருந்த பாலாஜி ஆகியோரும் மோசடி வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த 12 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

    மேலும் போலி ஆவணத்தை பதிவு செய்த சார் பதிவாளர் சிவசாமி கடந்த 20-ந்தேதி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் போலி பத்திரம் பதிவு செய்தபோது பதிவுத்துறை இயக்குனராக இருந்த ரமேஷ், புதுவை பதிவாளராக இருந்த பாலாஜி ஆகியோரும் மோசடி வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

    இருவரும் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.

    இந்த நிலையில் நில அளவைத்துறை இயக்குனர் ரமேஷ் மற்றும் மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜிலென்ஸ் மூலம் கவர்னர், தலைமை செயலருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.

    இதையடுத்து 2 பேரும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வகித்து வந்த பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    நில அளவைத்துறை இயக்குனர் பதவி தெற்கு சப்-கலெக்டர் முரளிதரனுக்கும், மாவட்ட பதிவாளர் பதவி வடக்கு சப்-கலெக்டர் கந்தசாமிக்கும், மீன்வளத்துறை இயக்குனர் மாதவி மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை இயக்குனர் முத்துமீனாவுக்கும், சுற்றுலா வளர்ச்சிக்கழக இயக்குனர் பொறுப்பு பதவி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினிக்கும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

    போலி பத்திரம் தயாரிக்க உதவிய புதுவை சின்னவாய்க்கால் தெருவை சேர்ந்த ரியல்எஸ்டேட் புரோக்கர் பாலமுத்து வேல்(76), குருசுகுப்பம் சிவராமன்(49) ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதனால் இவ்வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×