என் மலர்
புதுச்சேரி

புதுவையில் தொடர் மழை- வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது
- மழை காரணமாக புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- புதுவையில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை 6.74 செ. மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
புதுச்சேரி:
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்துள்ளது.
இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுவையில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தது. நேற்று பகல் வரை மழை பெய்யவில்லை. இரவு 7 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது.
தொடர்ந்து இரவு முழுவதும் அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்தவண்ணம் இருந்தது. இன்று அதிகாலை வானம் மப்பும், மந்தாரமுமாக இருட்டாக இருந்தது. மேக கூட்டத்தில் சூரியனை பார்க்க முடியவில்லை. காலை 6 முதல் 7 மணி வரை கனமழை பெய்தது.
இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க தொடங்கியது. தொடர்மழையால் பாவாணர் நகர், ரெயின்போ நகர் உட்பட ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. ரெயின்போ நகரில் சில வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. தொடர்ந்து விட்டுவிட்டு அவ்வப்போது மழை பெய்தவண்ணம் உள்ளது.
மழை காரணமாக புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை 6.74 செ. மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலில் அலைகளின் சீற்றம் ஆக்ரோஷமாக உள்ளது. எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. கடல் அலை சீற்றம் காரணமாக பிள்ளைச்சாவடி பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
பிள்ளைச்சாவடி கிராமத்தில் தூண்டில் முள் வளைவு அமைக்காததால் ஏற்கனவே இரு சாலைகள், 100 தென்னை மரங்கள், 100 வீடுகள் அடித்து செல்லப்பட்டன. மக்களின் தொடர் போராட்டத்தால் இங்கு கல் கொட்டும் பணி நடந்தது. 300 அடி தூரம் கல் கொட்டி சாலை அமைக்கும் சூழலில் காலை முதல் அலை சீற்றத்திற்கு அவை கடலுக்குள் இழுத்து செல்லப்படுகின்றன.
மேலும் 5 குடிசை வீடுகளும் 5 தென்னை மரங்களும் வேரோடு சாய்ந்தன. சாலையோர மின் கம்பங்கள், குடியிருப்பு பகுதியில் இருந்த குடிநீர் குழாய்களும் அடித்துச் செல்லப்பட்டன. அரசு சார்பில் கட்டித்தந்த மீன்வலை காப்பகத்தின் தரைத்தளத்திலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து அலை சீற்றம், கடல் அரிப்பால் பிள்ளைச்சாவடி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.






