என் மலர்
புதுச்சேரி

புதுவை அருகே கழுத்தை நெரித்து வாலிபர் கொலை
- புதுவை அருகே கழுத்தை நெரித்து வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்ததால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
- கொலை சம்பவம் காரணமாக அரங்கனூர் மற்றும் கீழ்குமாரமங்கலம் பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.
பாகூர்:
புதுவை அருகே அரங்கனூரை அடுத்த தமிழக பகுதியான கீழ்குமார மங்கலம் காளி கோவில் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் தமிழரசன்(வயது32). இவர் பிளம்பிங் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு தமிழரசன் வீட்டில் இருந்தார். அப்போது 3 பேர் தமிழரசனை மோட்டார் சைக்கிளில் வலுகட்டாயமாக அழைத்து சென்றனர். அதன்பிறகு வெகு நேரமாகியும் தமிழரசன் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் தமிழரசனின் செல்போனில் தொடர்பு கொண்டனர்.
அப்போது அவரது செல்போனை வேறு நபர் எடுத்து பேசினார். தமிழரசன் அதிக குடிபோதையில் இருப்பதாகவும், போதை தெளிந்த பின்னர் வீட்டுக்கு வருவார் என்று தெரிவித்தார்.
ஆனால் அதன்பிறகும் பல நேரம் கழித்தும் தமிழரசன் வீடு திரும்பதால் மீண்டும் அவரது செல்போனில் பெற்றோர் தொடர்பு கொண்டனர்.
அப்போது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பதட்டமடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் சென்று தமிழரசனை தேடினர். ஆனால் தமிழரசன் எங்கும் இல்லாததால் வீடு திரும்பினர்.
இந்தநிலையில் புதுவை பகுதியான அரங்கனூர் சுடுகாட்டு பகுதியில் இன்று காலை தமிழரசன் முகத்தில் படுகாயத்துடன் பிணமாக கிடந்தார். அவ்வழியாக சென்ற விவசாயிகள் இதனை பார்த்து தமிழரசனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்ட னர். அவர்கள் தமிழரசனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
மேலும் தகவல் அறிந்த புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா, போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
தமிழரசனை மர்ம நபர்கள் கழுத்தை நெரித்தும், முகத்தில் சரமாரியாக தாக்கியும் கொடூரமாக கொலை செய்திருப்பதை கண்டனர். இதையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் கீழ்குமாரமங்கலம் பகுதியில் 2 பிரிவினர் தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டு வந்துள்ளனர். இவர்களுக்குள் அடிக்கடி மோதல் இருந்து வந்துள்ளது.
இந்த மோதலில் தமிழரசனும் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக வழக்கும் அவர் மீது உள்ளது. எனவே இந்த மோதல் எதிரொலியாக தமிழரசனை எதிர் கோஷ்டியினர் கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தமிழரசனை அழைத்து சென்ற நபர்கள் யார்? அவர்கள் மூலம் தமிழரசனை எதிர் கோஷ்டினர் கழுத்தை நெரித்து கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைத்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் காரணமாக அரங்கனூர் மற்றும் கீழ்குமாரமங்கலம் பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு பாகூர் போலீசாரும், ரெட்டிச்சாவடி போலீசாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






