என் மலர்
புதுச்சேரி

புதுவை அரியாங்குப்பத்தில் அரிசி கடை பூட்டை உடைத்து பணம் கொள்ளை
- முகமூடி கொள்ளையர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
- புதுவை அரியாங்குப்பம் ட்ரீம் சிட்டி பகுதியை சேர்ந்தவர் பூரண சந்திரன்.
பாகூர்:
அரியாங்குப்பத்தில் அரிசி கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
புதுவை அரியாங்குப்பம் ட்ரீம் சிட்டி பகுதியை சேர்ந்தவர் பூரண சந்திரன் (வயது 31). இவர் அரியாங்குப்பம் புறவழி சாலை தேசிய வங்கி அருகில் அரிசி கடை வைத்து வியாபாரம் நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் அரிசி கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மீண்டும் அரிசி கடையைத் திறக்க பூரணசந்திரன் வந்தார். அப்போது அரிசி கடையின் ஷட்டரில் உள்ள பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது.
பின்னர் பூரணசந்திரன் கடையின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு கல்லாப் பெட்டியில் வைத்திருந்த ரூ.90 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார்.
மேலும் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களும் மாயமாகி இருந்தது. மர்ம நபர்கள் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்ததோடு கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களையும் கையோடு எடுத்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து பூரண சந்திரன் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அங்கு மற்ற கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர்கள் முகமூடி அணிந்தும், முகவசம் அணிந்தும் கொள்ளையில் ஈடுபட்டது பதிவாகி இருந்தது.
எனவே முகமூடி கொள்ளையர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. எந்நேரமும் மக்கள் நடமாட்டமுள்ள புறவழி சாலையில் அமைந்துள்ள அரிசி கடையில் பூட்டை உடைத்து துணிகரமாக பணம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொள்ளாததால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக வியாபாரிகளும், பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர். எனவே
போலீஸ் உயர் அதிகாரிகள் இதில் தலையிட்டு இரவு நேர ரோந்து பணியை தீவிரபடுத்திட அரியாங்குப்பம் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.






