என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சுருக்கு வலை பயன்படுத்த எதிர்ப்பு- புதுவை துறைமுகத்தில் போலீஸ் பாதுகாப்பு
    X

    தேங்காய் திட்டு துறைமுகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காட்சி.

    சுருக்கு வலை பயன்படுத்த எதிர்ப்பு- புதுவை துறைமுகத்தில் போலீஸ் பாதுகாப்பு

    • கடல் வழியிலும் கடலோர காவல்படை சார்பில் ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது.
    • மோதலை தவிர்க்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா உத்தரவின் பேரில் 3 சூப்பிரண்டுகள் தலைமையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    சுருக்கு மடிவலை பயன்படுத்த தமிழகம் மற்றும் புதுவையில் தடை விதிக்கபட்டுள்ளது.

    இருப்பினும் புதுவையில் சுருக்குவலையை சிலர் இன்னமும் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவ கிராமங்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28-ந்தேதி வீராம்பட்டினம்- நல்லவாடு மீனவ கிராமங்களுக்கு இடையே கடல் மார்க்கமாகவும் கடற்கரையிலும் மோதல் ஏற்பட்டது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கலவரத்தை அடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் வீராம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த வாரம் கூடி இன்று (திங்கட்கிழமை) முதல் புதுவை துறைமுகத்துக்குள் சுருக்குவலையுடன் வரும் படகுகள் தடை செய்யப்படும். மீறி வரும் படகுகள் மற்றும் வலைகள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்தனர்.

    இதனால் இன்று மீனவர்களுக்குள் மோதல் வரக்கூடாது என்பதற்காக காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர். வீராம்பட்டினம், நல்லவாடு, வம்பா கீரப்பாளையம் மற்றும் தேங்காய்த்திட்டு துறைமுகம் பகுதியில் போலீசார் காலை 7 மணி முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    கடல் வழியிலும் கடலோர காவல்படை சார்பில் ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. மோதலை தவிர்க்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா உத்தரவின் பேரில் 3 சூப்பிரண்டுகள் தலைமையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவ கிராமங்களை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×