search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பெண் வியாபாரி கொலை செலவுக்காக ரூ.10 லட்சம் நகை திருடிய கும்பல்- போலீஸ் காவலில் 2 பேரிடம் விசாரணை
    X

    பெண் வியாபாரி கொலை செலவுக்காக ரூ.10 லட்சம் நகை திருடிய கும்பல்- போலீஸ் காவலில் 2 பேரிடம் விசாரணை

    • சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் சமோசா வியாபாரி ராஜ் என்கிற ராஜேஸ்வரி நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
    • சென்னை சிறையில் அடைக்கப்பட்ட ஜெகதீசன் மற்றும் சூர்யாவை கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறையில் இருந்து வானூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

    சேதராப்பட்டு:

    புதுவை அருகே தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அடுத்த விழுப்புரம் நெமிலி சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம். லாரி டிரைவரான இவரது மனைவி காயத்ரி. கடந்த 13-ம் தேதி குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று புதுவை திருக்கனூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று குழந்தை சிகிச்சை முடிந்ததும் நெமிலியில் உள்ள அவரது வீட்டுக்கு திரும்பினர்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு லாக்கரில் இருந்த நெக்லஸ், ஆரம், கம்மல், வளையல் என 20 சவரன் தங்க நகைகளும், கொலுசு உள்ளிட்ட அரை கிலோ வெள்ளி பொருட்களும் என ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள் திருட்டுப் போயிருந்தது.

    சம்பவ இடத்திற்கு கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுனில் தலைமையில் வானூர் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் செல்வத்தின் வீட்டில் விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தனர். தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 19-ம் தேதி சென்னை சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் மீனம்பாக்கத்தைச் சேர்ந்த சமோசா வியாபாரி ராஜ் என்கிற ராஜேஸ்வரி நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    அந்த கொலையில் கைதான சைதாப்பேட்டை ஜெகதீசன், பொன்னேரி அடுத்த மீஞ்சூரை சேர்ந்த சூர்யா, திண்டிவனம் சக்திவேல், சென்னை ஜான்சன் மற்றும் ராஜேஸ்வரியின் தங்கை நாகவள்ளி ஆகிய 5 பேரிடமும் எழும்பூர் ரெயில்வே எஸ்.பி. பொன்ராமு நடத்திய விசாரணையில், 19-ம் தேதி அரங்கேற்றிய கொலைக்கு முன்னர் கடந்த 14-ம் தேதி திண்டிவனம் வந்த சைதாப்பேட்டை ஜெகதீசன், பொன்னேரி சூர்யா ஆகிய இருவரும் திண்டிவனத்தில் உள்ள சக்திவேல் வீட்டில் தங்கி இருந்து நெமிலி சீனிவாசபுரத்தில் டிரைவர் செல்வம் வீட்டை நோட்டமிட்டு பகல் நேரத்திலேயே கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி தங்கம் மற்றும் வெள்ளி நகையை திருடி சென்றதும் தெரிய வந்தது. மேலும் சென்னை சென்ற ஜெகதீசன், சூர்யா திண்டிவனம் சக்திவேல் ஆகியோர் இவர்களது நண்பர் நாகவள்ளி தூண்டுதலின் பேரில் ராஜேஸ்வரியை கொலை செய்ததும் தெரிய வந்தது.

    ராஜேஸ்வரியை கொலை செய்ய திட்டமிட்ட ஜெகதீசன் தலைமையிலான கும்பல் திண்டிவனத்தைச் சேர்ந்த சக்திவேலுடன் கலந்தாலோசித்து செலவுக்காக டிரைவர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்த தகவல் குறித்து ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு பொன் ராமு, விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாயிடம் அளித்த தகவலின் அடிப்படையில் வானூர் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் தலைமையிலான போலீசார் சென்னை சிறையில் அடைக்கப்பட்ட ஜெகதீசன் மற்றும் சூர்யாவை கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறையில் இருந்து வானூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

    Next Story
    ×