என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் கொட்டித் தீர்த்த கனமழை- அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியது
    X

    புதுவையில் கொட்டித் தீர்த்த கனமழை- அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியது

    • வெயில் மக்களை வாட்டி வந்த நிலையில் திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • மழை காரணமாக பல்வேறு இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கோடைகாலம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    நேற்று முன்தினம் நள்ளிரவு 12.15 மணி முதல் அதிகாலை 2.15 மணி வரை பலத்த மழை பெய்தது. நேற்று காலை முதல் வறண்ட வானிலை நிலவியது. பகலில் வெயில் கொளுத்திய நிலையில் மாலையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது.

    மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. 1½ மணி நேரம் இடைவிடாது கொட்டித்தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    புஸ்சி வீதி, செயின்தெரேஸ் வீதி, காந்தி வீதி, லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளும் வெள்ளக்காடாக காட்சியளித்தன. பாவாணர் நகர், பூமியான்பேட்டை குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

    புதுவையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை 10 செ.மீ. மழை பதிவானது. வெயில் மக்களை வாட்டி வந்த நிலையில் இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பாகூர் பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இந்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பாகூர், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில், பிள்ளையார்குப்பம், குருவிநத்தம், சேலியமேடு பகுதியில் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். மேலும் பாகூர் பகுதியில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தது. வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அறுவடை பணிகள் பாதிப்படைந்துள்ளது.

    Next Story
    ×