search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பிரான்ஸ் மக்களாட்சி தினம்- புதுச்சேரியில் மின்விளக்கு ஏந்தி பிரெஞ்சு மக்கள் ஊர்வலம்
    X

    பிரான்ஸ் மக்களாட்சி தினம்- புதுச்சேரியில் மின்விளக்கு ஏந்தி பிரெஞ்சு மக்கள் ஊர்வலம்

    • பிரெஞ்சு துணை தூதர் லிஸ் டால்போட் பாரே நடனமாடி பிரெஞ்சு மக்களை உற்சாகப்படுத்தினார்.
    • பேரணியில் 500-க்கும் மேற்பட்ட பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    கடந்த 1789-ம் ஆண்டு ஜூலை 14-ந்தேதி பிரான்ஸ் நாட்டில் இருந்த மன்னராட்சியை பாரீஸ் நகரில் உள்ள பஸ்தி என்ற சிறைச்சாலையை மக்கள், புரட்சி மூலம் தகர்த்து முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சியை நிறுவினர்.

    இந்த தினம் பிரான்ஸ் நாட்டு தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. அக்காலத்தில் மின்சாரம் இல்லாததால் மக்கள் தீப்பந்தம் ஏந்தி புரட்சி செய்து வென்றனர்.

    இத்தினத்தை நினைவு கூறும் வகையில் பிரான்ஸ் நாடு முழுவதிலும், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வாழும் அனைத்து நகரங்களிலும் ஜூலை 13-ந்தேதி பேரணி தீப்பந்த ஊர்வலம் நடைபெறும்.

    புதுவையில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் இதை நினைவுகூறும் வகையில் மின்விளக்கு ஊர்வலம் நடத்தினர். புதுவை பிரெஞ்சு தூதரகம் சார்பில், கடற்கரை சாலை டு பிளக்ஸ் சிலையில் இருந்து பிரெஞ்சு தூதரகம் வரை 3 கி.மீ. தூரம் டார்ச் லைட், மின் விளக்குகளை கையில் ஏந்திய படியும், பிரான்ஸ் நாட்டின் தேசியக் கொடி மற்றும் இந்திய நாட்டின் தேசியக்கொடியை கையில் ஏந்தி வந்தனர்.

    ஊர்வலத்தின் முன் ஈபிள் கோபுரம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கொண்டுவரப்பட்டது. கடற்கரை சாலையில் பிரெஞ்சு போர்வீரர்கள் நினைவிடத்தில், இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்பின் பிரான்ஸ் நாட்டு பாடல்கள் இசைக்கப்பட்டு ஆடிப்பாடி மகிழ்ந்தபடி ஊர்வலம் சென்றனர்.

    ஊர்வலத்தில் நடிகர் விஜய்யின் ரஞ்சிதமே பாடலுக்கு பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்கள் உற்சாகமாக நடனமாடினர்.

    பிரெஞ்சு துணை தூதர் லிஸ் டால்போட் பாரே நடனமாடி பிரெஞ்சு மக்களை உற்சாகப்படுத்தினார். பேரணியில் 500-க்கும் மேற்பட்ட பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இரு நாட்டு உறவையும் மேம்படுத்தும் விதமாக பிரான்ஸ் நாட்டின் கொடியின் வண்ணத்தில் புதுவை தலைமை செயலகம் மின் ஒளியில் மின்னியது. புதுவை நகராட்சியின் மேரி கட்டிடம், போர் வீரர் நினைவிடம், பிரான்ஸ் தூதரகம் ஆகியவையும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    Next Story
    ×