search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சொத்து வாங்கும் முன்பு நேரம் ஒதுக்கி விசாரியுங்கள்
    X

    கோப்பு படம்.

    சொத்து வாங்கும் முன்பு நேரம் ஒதுக்கி விசாரியுங்கள்

    • பத்திரப்பதிவு துறை வேண்டுகோள்
    • அனைத்து சொத்து ஆவணங்கள், வாரிசுதாரர்கள், நீதிமன்ற உத்தரவுகள், தீர்ப்புகளை சொத்து விற்பவருடன் உள்ள இணைப்புடன் சரிபார்க்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவையில் போலி ஆவணம், பத்திரம், உயில்கள் மூலம் சொத்து அபகரிக்கப்படும் குற்றம் தொடர்கிறது.

    இந்த மோசடியை தொடர்ந்து சொத்துக்கள் வாங்கும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை பத்திரப்பதிவு துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சார்பதிவாளர் அலுவலகங்களில் தகவல் வைக்கப்பட்டுள்ளது.

    இதன் விபரம் வருமாறு:-

    வாங்கும் சொத்து யார் பெயரில் உள்ளது என்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். பட்டாவில் உள்ள பெயருக்கும், விற்பவருக்கும் உள்ள தொடர்பை விசாரிக்க வேண்டும். அனைத்து சொத்து ஆவணங்கள், வாரிசுதாரர்கள், நீதிமன்ற உத்தரவுகள், தீர்ப்புகளை சொத்து விற்பவருடன் உள்ள இணைப்புடன் சரிபார்க்க வேண்டும்.

    மனையோ, நிலமோ நேரில் பார்வையிட்டு அருகில் குடியிருப்பவர், குடியிருப்பு நலச்சங்கத்தினரிடம் சொத்தில் வில்லங்கம் உள்ளதா? என உண்மை நிலை விசாரிக்க வேண்டும். சர்வே நம்பரை நில அளவை பதிவேடுகள் துறையில் சரிபார்க்க வேண்டும். நிலத்தை அளந்து பார்க்க வேண்டும். நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் உள்ளதா? என விசாரிக்க வேண்டும்.

    பத்திர நகல் மட்டும் இருந்தால் அசல் ஆவணங்கள் அடமானம் வைக்கப்பட்டுள்ளதா? தொலைந்து போயிருந்தால் விளம்பரம் செய்யப்பட்டு, காவல்துறையில் பதிவு செய்யப் பட்டுள்ளதா? என விசாரிக்க வேண்டும்.

    சார்பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்க சான்றிதழ் பெற்று பரிவர்த்தனைகளை சரிபார்க்க வேண்டும்.

    பவர் பத்திரம் மூலம் சொத்து வாங்கும்போது அதை அளித்தவர் உயிருடன் உள்ளாரா? என விசாரிக்க வேண்டும். மூலப்பத்திரம் பிரெஞ்சு மொழியில் இருந்தால் அதை தமிழாக்கம் செய்து உண்மை தன்மை அறிய வேண்டும். ஒரு சொத்தை வாங்கும் முன்பாக சிறிது நேரம் ஒதுக்கி அதுபற்றி விசாரியுங்கள்.

    உழைத்து சம்பாதித்த பணம் வீணாக வேண்டாம் என பொதுமக்களுக்கு பத்திரப்பதிவு துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

    Next Story
    ×