என் மலர்
புதுச்சேரி

புதுவை அருகே பெற்றோரை வீட்டுக்குள் அனுமதிக்காமல் வீட்டை பூட்டிச் சென்ற மகன்
- கடந்த வாரம் வாடகை வீட்டிலிருந்து பொருட்களை எடுத்து கொண்டு, மாரிமுத்து தம்பதியினர் இளைய மகன் வீட்டிற்கு சென்றனர்.
- புகாரின் அடிப்படையில் கோட்டகுப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
புதுச்சேரி:
புதுவையை அடுத்த கோட்டகுப்பம் அருகே மாத்தூரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (69) விவசாயி. இவரது முதல் மனைவி இறந்த நிலையில், மனைவியின் தங்கையான லட்சுமியை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
முதல் மனைவிக்கு கோவிந்தராஜ் (42) வெங்கடேஷ் (40) ஆகிய 2 மகன்களும், 2-வது மனைவிக்கு சங்கரி (35) என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு 2 மகன்கள் மற்றும் மகளுக்கு தனது விவசாய நிலத்தை பாகப்பிரிவினை செய்து எழுதி வைத்தார். இதில் மாரிமுத்து வசித்த வந்த வீட்டை, இளைய மகன் வெங்கடேசுக்கு சேர்த்து எழுதி கொடுத்தார்.
பின்னர் 2015-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட வெங்கடேஷ் 2017-ம் ஆண்டு வயதான பெற்றோர் இருவரையும் அடித்து துன்புறுத்தி வீட்டைவிட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள வாடகை வீட்டில் குடியேறிய வயதான தம்பதியினர் தங்கள் வீட்டை மீட்டுத்தரக் கோரி விழுப்புரம் கோட்டாசியர் மற்றும் போலீசாரிடம் முறையிட்டனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய கோட்டாட்சியர், வயதான தம்பதியினரை தாங்கள் சாகும் வரை இளைய மகன் வெங்கடேஷ் தன்னுடைய வீட்டில் வைத்து பராமரிக்கவும், மகன் மற்றும் மகள் சேர்ந்து மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டனர்.
இதனை தொடர்ந்து கடந்த வாரம் வாடகை வீட்டிலிருந்து பொருட்களை எடுத்து கொண்டு, மாரிமுத்து தம்பதியினர் இளைய மகன் வீட்டிற்கு சென்றனர்.
அப்போது வெங்கடேஷ் இவர்களை வீட்டிற்குள் வரவிடாமல், வீட்டை பூட்டிக்கொண்டு வயதான தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்து தனது மாமியார் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் செய்வதறியாமல் தவித்து வரும் வயதான தம்பதியினர், கடந்த ஒரு வாரமாக பூட்டிய வீட்டின் வெளியே கட்டில், பீரோ மற்றும் வீட்டு உபயோக பொருட்களுடன் காத்து கிடக்கின்றனர்.
இது தொடர்பாக அவர்கள் கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் கோட்டகுப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
இந்த விவகாரத்தில் கோட்டாட்சியர் தலையிட்டு உத்தரவிட்டதால் போலீசார் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல் உள்ளனர்.






