என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
போலீசாரின் எச்சரிக்கையை மீறி ஏமாறும் புதுவை மக்கள்
- தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
- ரூ.7 லட்சத்து 72 ஆயிரத்து 404 பணத்தை தாண்டவராயன் செலுத்தியுள்ளார். மேலும் பணம் செலுத்த அவர்கள் தொந்தரவு செய்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் சைபர் கிரைம் போலீசார் ஆன்லைன் முதலீடுகள், வெளிநாடு வேலை வாய்ப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
இருப்பினும் ஆன்லைன் மோசடிகளில் பணம் இழப்போர் பட்டியல் நீடித்து வருகிறது. புதுவை பாகூர் பிள்ளை யார்குப்பத்தை சேர்ந்தவர் செந்தமிழன்(வயது27). இவர் வேலைக்காக ஆன்லைனில் பதிவு செய்திருந்தார். கடந்த மார்ச் 21-ந் தேதி, வெளிநாட்டில் லேப்டெக்னீ ஷியன் வேலை உள்ளதாக ஒரு எண்ணை தொடர்பு கொள்ள கூறப்பட்டிருந்தது.
அதில் பேசிய போது, குவைத்தில் வேலை இருப்பதாக கூறிய நபர் ரூ.5 ஆயிரத்து 900 கட்ட சொல்லியுள்ளார். பின்னர் மருத்துவ காப்பீடுக்கு ரூ.30 ஆயிரம், பணி பாதுகாப்புக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம், விசா அனுப்ப ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் என படிப்படியாக ரூ.8 லட்சத்து 34 ஆயிரத்து 900 செந்தமிழன் அனுப்பினார். ஆனால் பணி அழைப்பு வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
இதே போல் பாகூர் தெற்கு வீதியை சேர்ந்த தாண்டவ ராயனிடம் (வயது68),செல்போனில் பேசிய நபர் குறைந்தவட்டியில் லோன் தருவதாக கூறினார்.
இதை நம்பி அவர் ரூ.39 ஆயிரத்து 562 கட்டினார். ஆனால் அந்த நபர் மீண்டும் தொடர்பு கொள்ளவில்லை. ஒரு மாதத்துக்கு பின்பு தாண்ட வராயனை தொடர்புகொண்ட மற்றொரு நபர், ஏற்கனவே செலுத்திய பணத்தையும், லோனும் தருவதாக கூறியுள்ளார்.
இதனை நம்பி ரூ.7 லட்சத்து 72 ஆயிரத்து 404 பணத்தை தாண்டவராயன் செலுத்தியுள்ளார். மேலும் பணம் செலுத்த அவர்கள் தொந்தரவு செய்தனர்.
தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த தாண்டவராயன் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
இந்த சம்பவங்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் மோசடிகள் குறித்து பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.






