என் மலர்
புதுச்சேரி

மத்திய குழுவுடன் வைத்திலிங்கம் எம்.பி. ஆலோசனை நடத்திய காட்சி.
புதுவை-காரைக்காலுக்கு உரிய பங்கு நீரை பெற குழாய் அமைக்க வேண்டும்-மத்திய குழுவிடம் வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்
- புதுவையில் நிலையான நீர் மேலாண்மைக்கான விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.) தயாரிப்பதற்கு ஒரு குழுவை நியமிக்க வேண்டும் என வைத்திலிங்கம் எம்.பி. பாராளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய ஜலசக்தி மந்திரியிடம் கேட்டு கொண்டார்.
- புதுவை, காரைக்கால் ஆகிய 2 பகுதிகளும் மழை அதிகம் பெய்யும் பகுதிகளாகத்தான் உள்ளன. ஆனால் மழைநீரை தேக்கி வைப்பதற்கான சேமிப்பு பகுதிகள் இல்லை.
புதுச்சேரி:
புதுவையில் நிலையான நீர் மேலாண்மைக்கான விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.) தயாரிப்பதற்கு ஒரு குழுவை நியமிக்க வேண்டும் என வைத்திலிங்கம் எம்.பி. பாராளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய ஜலசக்தி மந்திரியிடம் கேட்டு கொண்டார்.
இதனையடுத்து ஜலசக்தி அமைச்சர் உத்தரவின்பேரில் மத்திய நீர் ஆணையம் டெல்லி இயக்குனர் அபிஷேக் சின்ஹா தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் 2 நாள் பயணமாக புதுவை வந்தனர். அவர்கள் வைத்திலிங்கம் எம்.பி.யை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினர்.
அவர்களிடம் வைத்திலிங்கம் எம்.பி. கூறியதாவது:-
புதுவை, காரைக்கால் ஆகிய 2 பகுதிகளும் மழை அதிகம் பெய்யும் பகுதிகளாகத்தான் உள்ளன. ஆனால் மழைநீரை தேக்கி வைப்பதற்கான சேமிப்பு பகுதிகள் இல்லை. இதனால் புதுவை, காரைக்காலில் பெய்யும் மழையும், புதுவை, காரைக்காலிற்கு தமிழக ஆறுகளில் இருந்து வரும் நீரும் வீணாக கடலில் கலந்து விடுகின்றது.
மழைக்காலத்தில் ஆற்று நீரை அணையில் இருந்து திறந்து விடுகின்றனர். ஆனால் கோடைக்காலத்தில் கேட்டாலும் தருவதில்லை. மேலும் உங்கள் பங்கை தந்தாலும் எப்படி எடுத்துச் செல்வீர்கள் என்றும் கேட்கின்றனர். இதனால் தமிழக அணைகளில் இருந்து புதுவை-காரைக்காலிற்கு உரிய பங்கை கொடுக்க குழாய் அமைக்கலாம் அல்லது மாற்று வழி காண வேண்டும்.
புதுவை நகரப்பகுதியில் வழங்கப்படும் குடிநீரில் கரைந்த திடப்பொருள்கள் அளவு 3 ஆயிரத்தை தாண்டி உள்ளது. எனவே தரமான குடிநீர் வழங்க மழைநீரை தேக்கி வைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க வேண்டும். இந்த திட்டத்தை புதுவையை ஒட்டியுள்ள தமிழகத்துடன் இணைத்தும் தயாரிக்கலாம், அல்லது புதுவை-காரைக்காலிற்கு என்று தனியாகவும் தயாரிக்கலாம்.
விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வரும் மழை காலத்திற்குள் குழாய் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின்போது மத்திய நீர் ஆணைய சென்னை இயக்குனர் தங்கமணி, துணை இயக்குனர் பன்னீர்செல்வம், டெல்லி துணை இயக்குனர் தர்மேந்திர சிங், புதுவை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், உதவி பொறியாளர் திருஞானம், பாராளுமன்ற உறுப்பினரின் தனி உதவியாளர் வினோத் ஆகியோர் உடன் இருந்தனர்.






