search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி-தமிழக எல்லையில் பொது இடத்தில் மது குடித்த குடிமகன்களுக்கு நூதன தண்டனை
    X

    பொது இடத்தில் மது குடித்த குடிமகன்களுக்கு நூதன தண்டனை கொடுக்கப்பட்ட காட்சி.

    புதுச்சேரி-தமிழக எல்லையில் பொது இடத்தில் மது குடித்த குடிமகன்களுக்கு நூதன தண்டனை

    • மாலை பொழுதாகும் போது ஒட்டு மொத்தமாக அந்த லாரி முனையமே முற்றிலும் திறந்தவெளி மதுபாராக மாறிவிடுகிறது.
    • வார இறுதி நாட்களில் இங்கு வரும் குடிமகன்களில் எண்ணிக்கை கட்டுக்கடங்காது செல்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளது.

    புதுவை தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்கள் ஏற்றி இறக்க வரும் கனரக வாகனங்கள் நிறுத்த சரியான இடம் இல்லாததால் கடந்த காலங்களில் பிரதான சாலைகளின் ஒரம் நிறுத்தினர். வெளிமாநிலங்களில் இருந்து வரும் டிரைவர்கள் சாலையிலேயே தங்கி சமைத்து உண்டு இருந்தனர்.

    இதனால் சில ஆண்டுகளுக்கு முன்பு லாரி முனையம் தொடங்கப்பட்டது. இந்த பகுதி தமிழகத்தோடு ஒட்டிய பகுதியாகும். இதனால் எல்லை பகுதிகளில் அதிக அளவில் மதுக்கடைகள் உள்ளது. லாரி முனையம் தொடங்கப்பட்டபோது நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் அங்கு வந்து நிறுத்தப்பட்டது. லாரி ஓட்டுனர்களும், கிளினர்களும் அங்கேயே சமைத்து ஓய்வெடுத்தனர்.

    கொரோனா காலத்திற்கு பிறகு 24 மணி நேரமும் இயங்கும் திறந்தவெளி மதுபாராக லாரிமுனையம் மாறியுள்ளது. பெரும்பாலும் காலை நேரத்தில் மோட்டார் சைக்கிள், கார் ஓட்ட பயில்பவர்கள் அங்கு வருவர். விடுமுறை நாட்களில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கிரிக்கெட் விளையாடுவர்.

    இங்கு போக்குவரத்து கிளை அலுவலகமும் உள்ளது. சமீப காலமாக அங்கு பெண்கள் வாகன லைசென்ஸ் வாங்க பயிற்சிக்கு வருவதையே கைவிட்டுவிட்டனர். காரணம் காலை நேரங்களிலேயே மதுபிரியர்கள் லாரி முனையத்தில் அமர்ந்து மது அருந்துகின்றனர்.

    மாலை பொழுதாகும் போது ஒட்டு மொத்தமாக அந்த லாரி முனையமே முற்றிலும் திறந்தவெளி மதுபாராக மாறிவிடுகிறது.

    நள்ளிரவு வரை அங்கு குடிமகன்கள் மது அருந்துகின்றனர். குடிபோதைக்காரர்கள் கொண்டு வரும் வாகனங்கள் ஆயிரக்கணக்கில் அங்கு சாலையிலேயே நிறுத்தி வைக்கப்படுகிறது. காலையில் பார்க்கும் போது அந்த இடம் முழுவதும் காலி மதுபாட்டில்கள், தண்ணீர் பாட்டில், பாக்கெட் என பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது.

    சமீப காலமாக இங்கு நிறுத்தப்படும் லாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நூற்றுக்கணக்கான லாரிகள் நின்றிருந்த இடத்தில் 50-க்கும் குறைவான லாரிகள் தான் நிற்கிறது. இவையும் உள்ளூர் லாரிகள் என்று கூறப்படுகிறது. ஏனெனில் லாரி ஓட்டுனர்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை. குடிமகன்கள் லாரி ஓட்டுனர்களுடன் தகராறில் ஈடுபட்டு, சிலர் பணம் பறிக்கும் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதன் மறுபுறம் ஆரோவில் போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளது

    பெயரளவில் 2 மாநில போலீசாரும் குடிமகன்களை மிரட்டி அனுப்பி வைக்கின்றனர். இரவில் போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பெரும் கூட்டம் குடித்துக் கொண்டிருக்கிறது. இங்கு வரும் குடிமகன்களுக்கு திறந்த வெளி காற்றும், விளக்கு வசதியும் இலவசமாக கிடைக்கிறது. இதனால் எத்தனை முறை விரட்டினாலும் குடிமகன்கள் மீண்டும் படையெடுக்கின்றனர்.

    லாரி முனையம் தொடர்ந்து செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் இந்த பகுதியில் சுற்றுசுவருடன் கூடிய பெரிய விளையாட்டு திடல் அமைக்கலாம் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

    கோரிமேடு இன்ஸ்பெக்டர் பால முருகன், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் லாரி முனைய பகுதியில் மாலையில் ரோந்து சென்ற போது குடிமகன்கள் அங்கிருந்து தப்பி ஒடினர். அவர்களில் சிக்கியவர்களை பிடித்த போலீசார், குடிமக்களால் அங்கு போடப்பட்டுள்ள குப்பைகளை அங்கிருந்து அகற்ற உத்தரவிட்டனர்.

    ஒரு மணி நேரத்துக்கு மேலாக போதை தெளியும் வரையில் குடிமகன்களை போலீசார் குப்பைகளை அள்ள வைத்தனர். 3 சாக்கு பைகள் நிறைய குப்பைகளை அள்ளிய குடிமகன்கள், இனி மேல் இங்கு குடிக்க வரமாட்டோம் விட்டுவிடுங்கள் என கெஞ்சினர். அடுத்த முறை சிக்கினால் வழக்கு பதிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஆனால் இரவில் ஆயிரக்கணக்கான குடிமகன்கள் முனையத்தில் வழக்கம் போல் அமர்ந்து குடித்தனர். வார இறுதி நாட்களில் இங்கு வரும் குடிமகன்களில் எண்ணிக்கை கட்டுக்கடங்காது செல்கிறது.

    Next Story
    ×