என் மலர்
புதுச்சேரி

சாதனை திருநங்கையர்களுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் விருது வழங்கினார். அருகில் அமைச்சர்கள் தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார், கலெக்டர் வல்லவன் ஆகியோர் உள்ளனர்.
அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு முன்னுரிமை-அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அறிவிப்பு
- புதுவை அரசின் சமூக நலத்துறை மற்றும் சகோதரன் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் திருநங்கைகள் தின விழா கம்பன் கலையரங்கில் நடந்தது.
- திருக்காஞ்சியில் 2 திருநங்கைகளுக்கு கடைகள் வைத்து வியாபாரம் செய்ய வாய்ப்பு தரப்படும்.
புதுச்சேரி
புதுவை அரசின் சமூக நலத்துறை மற்றும் சகோதரன் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் திருநங்கைகள் தின விழா கம்பன் கலையரங்கில் நட ந்தது.
துறை இயக்குனர் குமரன் வரவேற்றார். சமூகநலத்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமை வகித்தார். அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் வாழ்த்தி பேசினார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் திருநங்கை சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார்.
விழாவில் சமூக நலத்துறை செயலர் உதயகுமார், கலெக்டர் வல்லவன், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் சித்ராதேவி, இந்தியாவின் முதல் திருநங்கை வக்கீல் சத்யஸ்ரீஷர்மிளா, மகாத்மாகாந்தி மருத்துவக்கல்லூரி பொது மேலாளர் ஆஷாசுரேஷ்பாபு, புதுவை மாநில ஊரக வளர்ச்சி முகமை பாலின ஒருங்கிணைப்பாளர் சாவித்ரி, சகோதாரன் மேம்பாட்டு நிறுவனர் ஷீத்தல் உட்பட பலர் கலந்து கொண்டனர். கள அதிகாரி கனகராஜ் நன்றி கூறினார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணி முதல்- அமைச்சர் ரங்கசாமி ஆட்சியில் முதல்முறையாக திருநங்கைகள் தின விழா கொண்டாடப்படுகிறது. முதல்-அமைச்சருடன் ஆலோசனை நடத்தி, 18 வயது நிரம்பிய திருநங்கைகளின் வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் டெப்பாசிட் செய்யப்படும். திருக்காஞ்சியில் 2 திருநங்கைகளுக்கு கடைகள் வைத்து வியாபாரம் செய்ய வாய்ப்பு தரப்படும்.
மாநிலம் முழுவதும் கணக்கெடுப்பு நடத்தி இலவச மனைப்பட்டா வழங்கி வீடு கட்டித்தரப்படும். அடுத்த ஆண்டுக்குள் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநிலத்தில் 500-க்கும் குறைவான திருநங்கைகளே உள்ளனர். இதனால் சதவீத அடிப்படையில் அரசு வேலையில் ஒதுக்கீடு வழங்க முடியாது. அதற்கு பதிலாக அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மாவட்ட தொழில் மையம் மூலம் சுயதொழில் செய்ய மானியத்தில் கடனுதவி வழங்கப்படும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு திட்டங்களை திருநங்கைகளுக்காக செயல்படுத்தி வருகிறது.
அவை அனைத்தும் புதுவையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். திருநங்கைகளின் கோரி க்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித்தர முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






