என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
பேக்கரி மீது மீண்டும் தாக்குதல் நடத்திய வாலிபரை பிடிக்க போலீசார் தீவிரம்
- ரெட்டியார் பாளையம் போலீஸ் நிலையம் அருகே தனியார் பேக்கரி உள்ளது.
- 50 சிமெண்ட் மூட்டைகள் வாங்கி தர வேண்டும் என வலியுறுத்தி சென்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி - விழுப்புரம் சாலை, ரெட்டியார் பாளையம் போலீஸ் நிலையம் அருகே தனியார் பேக்கரி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பேக்கரிக்கு வந்த ஒரு கட்சியினர், உழவர்கரையில் கட்சி அலுவலகம் கட்ட உள்ளதாகவும், அதற்கு 50 சிமெண்ட் மூட்டைகள் வாங்கி தர வேண்டும் என வலியுறுத்தி சென்றனர்.
சிமெண்ட் மூட்டை வாங்கி தர தாமதம் ஏற்பட்ட தால், கடந்த 12-ந் தேதி கடைக்கு வந்த உழவர்கரை பகுதியைச் சேர்ந்த ஆனந்த், சுப்ரமணி உள்ளிட்ட 8 பேர் பேக்கரி ஊழியர் ஆனந்த குமாரை சரமாரியாக தாக்கி கடையை சூறையாடினர்.
ரெட்டியார்பாளையம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி ஆனந்த், சுப்ரமணி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து, சுப்ரமணியை மட்டும் கைது செய்தனர். மற்ற 7 பேரை இதுவரை கைது செய்ய வில்லை.
வணிகர் கூட்டமைப்பினர் முதல்-அமைச்சர் ரங்கசாமி, போலீஸ் டி.ஜி.பி., ஸ்ரீனிவாசை சந்தித்து, பேக்கரி கடை மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
அதன் பின்னரே போலீ சார் தாக்குதல் நடத்திய கட்சியினரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஸ்கூட்டரில் வந்து இறங்கிய உழவர்கரையைச் சேர்ந்த ஒரு வாலிபர் முன்பு தாக்குதல் நடத்திய பேக்கரி கதவில் பீர்பாட்டிலை அடித்து உடைத்தார்.
கடை வாசலில் இருந்த கண்ணாடி மற்றும் டீ ஸ்டால் டேபிளை உடைத்து விட்டு அங்கிருந்து தனது ஸ்கூட்டரில் புறப்பட்டு சென்றார்.
இவை அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகி உள்ளது. பேக்கரி உரிமையாளர் கிஷோர்குமார், ஏற்கனவே நடந்த தாக்குதல் முன்விரோதம் காரணமாக மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது என, புகார் அளித்தார். ரெட்டியார் பாளையம் போலீசார் தாக்குதல் நடத்திய மீது சூறையாடுதல், அத்துமீறி நுழைதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே 12-ந்தேதி பேக்கரி கடையை அடித்து உடைத்த வழக்கில் தலைமறைவாக உள்ள 7 பேர் முன்ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. ஆனாலும் 7 பேரை போலீசார் கைது செய்யவில்லை. போலீசார் தங்களை நெருங்குவதை அறிந்து பேக்கரி கடையை மிரட்டு வதற்காக கடை மீது 2-வது முறையாக தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
பேக்கரி கடையை 2-வது முறையாக தாக்குதல் நடத்திய சம்பவம் காரணமாக, புதுச்சேரியில் வியாபாரிகள் அச்சம் அடைந்துள்ளனர். போலீசார் பாரபட்சமின்றி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.






