என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
புதுவை வரும் ஜனாதிபதியிடம் மனு-சமூக அமைப்புகள் தீர்மானம்
- சட்டமன்ற தீர்மானத்தை கவர்னர் மதிக்காத போக்கு, ஒட்டுமொத்த புதுவை மக்களை அவமதிக்கும் செயல்.
- இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக தனி மாநிலத் தகுதிக்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை பொது நல அமைப்புகளின் கலந்தாய்வு கூட்டம் வ.சுப்பையா இல்லத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு தலைமை வகித்தார். திராவிடர் விடுதலை கழகம் லோகு ஐய்யப்பன், தமிழ் மீனவர் விடுதலை வேங்கை மங்கையர்செல்வம், மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், திராவிடர் கழகம் அன்பரசன், தமிழர் களம் அழகர், தந்தை பெரியார் திராவிட கழகம் இளங்கோ, மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் முருகானந்தம், அம்பேத்கர் தொண்டர் படைபாவடைராயன், தலித் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், ராஜா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஸ்ரீதர், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் உமர், எஸ்.டி.பி.ஐ. சரத்பாஷா, தமிழ் தேசிய பேரியக்கம் வேலுச்சாமி, தன்னுரிமை கழகம் சடகோபன், படைப்பாளர் இயக்கம் தமிழ்நெஞ்சன், மாணவர் கூட்டமைப்பு சாமிநாதன், இந்திய தேசிய இளைஞர் முன்னணி கலைப்பிரியன், பி போல்ட் பஷீர், மக்கள் உரிமைக் கட்சி மணிமாறன் உட்பட 40-க்கும் மேற்பட்ட சமூக அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
புதுவை சட்டசபையில் ஒருமனதாக கொண்டு வந்த மாநில தகுதிக்கான தீர்மானத்தை கிடப்பில் போட்ட கவர்னரை வன்மை யாக கண்டிக்கிறோம். சட்டமன்ற தீர்மானத்தை கவர்னர் மதிக்காத போக்கு, ஒட்டுமொத்த புதுவை மக்களை அவமதிக்கும் செயல்.
தனி மாநில தகுதி வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து, 3 மாதமாகியும் மத்திய அரசை வலியுறுத்தத் தவறிய புதுவை அரசையும், அமைதி காக்கும் எம்.எல்.ஏ.க்களையும் கண்டிக்கிறோம்.
புதுவைக்கு வரும் ஜனாதிபதியை சந்தித்து பொதுநல அமைப்புகள் சார்பில் தனி மாநில தகுதி கோரி மனு அளிப்பது. இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக தனி மாநிலத் தகுதிக்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.






