search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    செல்போன் திருடனை முட்டிபோட வைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
    X

    செல்போன் திருடனை முட்டிபோட வைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

    • அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து திரண்டு வந்து செல்போன் திருட முயன்ற நபரை மடக்கி பிடித்தனர்.
    • அசோக்கை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    புதுச்சேரி:

    அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பிருந்தால் மண்டல். இவர் புதுச்சேரி சேதராப்பட்டில் வீடு வாடகை எடுத்து தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் பிருந்தால் மண்டல் நேற்று மதியம் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கினார். அப்போது ஒரு மர்ம நபர் பிருந்தால் மண்டலின் செல்போனை திருட முயன்றார். சத்தம் கேட்டு கண்விழித்த பிருந்தால் மண்டல் இதை பார்த்து திடுக்கிட்டு கூச்சலிட்டார்.

    உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து திரண்டு வந்து செல்போன் திருட முயன்ற நபரை மடக்கி பிடித்தனர்.

    பின்னர் அந்த நபரை முட்டி போட வைத்து தர்ம அடி கொடுத்தனர். தொடர்ந்து, அந்த நபரை சேதராப்பட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணை செய்ததில் அவர், திண்டிவனம் சிங்கனூர் புது காலனி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த அசோக் என்பதும், இவர் மீது சென்னை, விக்கிரவாண்டி மற்றும் வானூர் உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.

    மேலும் அசோக் தான் வசிக்கும் பகுதி அருகே அவர் டிபன் கடை நடத்தி வருவதும், பண தேவைக்காக பகுதி நேரமாக இதுபோல் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

    தொடர்ந்து அசோக்கை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    இதற்கிடையே, செல்போன் திருடனை பொதுமக்கள் பிடித்து முட்டி போட வைத்து தர்ம அடி கொடுத்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    Next Story
    ×