என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் நெல் திருவிழா 8-ந் தேதி நடக்கிறது
    X

    கோப்பு படம்.

    புதுவையில் நெல் திருவிழா 8-ந் தேதி நடக்கிறது

    • புதுவையில் பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • விவசாயிகளுக்கு வேளாண்துறை ஊக்கமளித்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    தமிழர்களின் பாரம்பரிய மற்றும் மருத்துவ குணம் கொண்ட சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, தூயமல்லி, குதிரைவாலி சம்பா உட்பட 140 ரக நெற்களை இயற்கை முறையில் பயிரிட விவசாயிகளுக்கு வேளாண்துறை ஊக்கமளித்து வருகிறது. ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தப்படும் என சட்டசபையில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அறிவித்தார்.

    கடந்த பிப்ரவரியில் வடமங்கலத்தில் நெல் திருவிழா நடத்தப்பட்டது. இதில் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்களின் மருத்துவ குணங்கள், அதன் பயன்கள், உர பயன்பாடின்றி பயிரிடும் முறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகள் தலா 2 கிலோ இலவசமாக வழங்கப்பட்டது.

    மக்களிடமும் வரவேற்பு உள்ளதால் பாரம்பரிய ரக நெல் பயிரிட விவசாயிகள் முன்வந்துள்ளனர். இதை ஊக்குவிக்க சம்பா பட்டத்துக்கு முன்பாக வேளாண் துறை சார்பில், வருகிற 8-ந் தேதி கரிக்கலாம் பாக்கத்தில் நெல் திருவிழா நடத்தப்பட உள்ளது. அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் திருவிழாவை தொடங்கி வைத்து, 10 பாரம்பரிய ரக நெல் விவசாயிகளுக்கு தலா 2 கிலோ விதை நெல் வழங்குகிறார்.

    இந்த விதை நெல்லை விவசாயிகள் நாற்று விட்டு, ஒற்றை நாற்று முறையில் பயிரிட ஆலோசனை வழங்கப்பட உள்ளது. இலவசமாக விதை நெல் வாங்கும் விவசாயிகள், அதை பயிரிட்டு அறுவடை செய்த பின், அரசுக்கு 4 கிலோ விதை நெல் வழங்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் விதை நெல் அடுத்த ஆண்டு 2 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பாரம்பரிய நெல் பயிரிடும் பரப்பு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

    Next Story
    ×