search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை தி.மு.க.வை ரங்கசாமியிடம் அடகு வைத்துவிட்டனர்
    X

    கூட்டத்தில் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பேசிய காட்சி. 

    புதுவை தி.மு.க.வை ரங்கசாமியிடம் அடகு வைத்துவிட்டனர்

    • அன்பழகன் ஆவேசம்
    • காங்கிரஸ் மேலிடம் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமியை பார்ப்பதையே தவிர்த்து வருகிறது.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை தொகுதி அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. செயல்வீரர்கள்- வீராங்கனைகளின் ஆலோசனைக் கூட்டம் 100 அடி சாலையில் உள்ள சன்வே ஓட்டலில் இன்று நடைபெற்றது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநில ஜெ.பேரவை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாஸ்கர் தலைமை தாங்கினார்.

    ஆதி என்ற ராமசாமி, ராசு என்ற வரதன், காந்தி, கேசவன், மருது என்ற மருதமலையப்பன், பிரதீப், செல்வகுமார், தேன்மொழி, சாந்தா, வனஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் லயன் சுரேஷ், நடராஜன், வடிவேலு, ஜெய்சங்கர், மணிவண்ணன், ரவிக்குமார், சேகர், சிதம்பரம், சுரேஷ், முத்துராஜூலு, பாலா, கவுரி, உமா தேவி, வேம்பு, பவானி ஆகியோர் வரவேற்புரையாற்றி னார்கள்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெற நாம் திட்டமிட்டு களப்பணி ஆற்ற வேண்டும். புதுச்சேரியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பூத் கமிட்டி அமைக்கும் பணியை தொய்வில்லாமல் செய்து முடிக்க வேண்டும்.

    நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற கூடிய தொகுதியாக முதலியார்பேட்டை தொகுதி இருந்தது.

    இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த பாஸ்கர் 2 முறை வெற்றி பெற்ற தொகுதி ஆகும்.

    புதுச்சேரி மாநிலத்திலேயே அதிக அளவில் அ.தி.மு.க. தொண்டர்களை கொண்ட தொகுதி ஆகும். வெற்றி பெற்றுவிடுவோம் என்ற தொண்டர்களின் அலட்சிய செயல்பாட்டினால் நாம் இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். தேர்தலில் சிறு அலட்சியம் கூட நமது வெற்றியை பாதித்து விடும். அதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.

    ஒரு ஓட்டு கூட வெற்றிக்கான ஓட்டு என்பதை நினைவில் கொண்டு கட்சி பணியை உத்வேகத்துடன் நடத்த வேண்டும்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியை தி.மு.க.விடம் முழுமையாக அடமானம் வைத்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த நெல்லித்தோப்பு, வில்லியனூர், காலாப்பட்டு, பாகூர் உள்ளிட்ட பல தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடாமல் தி.மு.க. போட்டியிட வாய்ப்பளித்து தி.மு.க. 6 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற காங்கிரஸ் முதல்-அமைச்சர் நாராயணசாமி காரணமாக இருந்தார். இதனால் காங்கிரஸ் மேலிடம் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமியை பார்ப்பதையே தவிர்த்து வருகிறது.

    தி.மு.க. சார்பில் தற்போது 6 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தும் அது உண்மையான எதிர்கட்சி யாக செயல்படவில்லை. அக்கட்சியின் மாநில அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா தான் செய்யும் வியாபாரத்திற்காக ஒட்டுமொத்த தி.மு.க.வையும், புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்., பா.ஜனதா கூட்டணி அரசிடம் அடமானம் வைத்துவிட்டார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாநில அவை தலைவர் அன்பானந்தம், மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராஜாராமன், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர் கணேசன், திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், புதுச்சேரி நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணைச் செயலாளர்கள் நாகமணி, கிருஷ்ணமூர்த்தி,காந்தி குமுதன், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில ஜெ.பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கர், மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ் குமார், முன்னாள் மாநில மாணவரணி பொருளாளர் பார்த்தசாரதி, மாநில இலக்கிய அணி பொருளாளர் குணா, தொகுதி செயலாளர், ராஜா, நடேசன், கிருஷ்ணன், குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் , பாலன், சிவராமராஜா, ராஜராஜன், முதலியார்பேட்டை தொகுதி மற்றும் வார்டு நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில் முதலியார்பேட்டை தொகுதி செயலாளர் கருணாநிதி நன்றி கூறினார்.

    Next Story
    ×