என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
புதுவையில் புதிய தொழிற்சாலைகள் தொடங்க ஊக்குவிக்க வேண்டும்
- மத்திய நிதி மந்திரியிடம் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் வலியுறுத்தல்
- புதுவை மாநிலத்தில் ரேசன் கடைகள் மூலம் மாநில திட்டத்தின் கீழ் அரிசி வழங்க அனுமதிக்க வேண்டும்.
புதுச்சேரி:
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமனிடம் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் ரூ 1 கோடிக்கு மேல் மாநிலத்திற்குள் வணிகம் செய்பவர்களுக்கு ஜி.எஸ்.டி. தளர்வு அளிக்கப்படுகிறது. ஆனால் சிறிய பரப்பளவை கொண்ட புதுவையில் வணிகர்கள் மாநிலத்திற்குள் ரூ 1 கோடி வணிகம் செய்வது சாத்தியமற்றது, அதனால் அவர்கள் பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்கின்றனர். புதுவை மாநிலத்தில் வணிகம் செய்பவர்களுக்கு நாடு முழுவதும் வணிகம் செய்யவும் அதில் ஜி.எஸ்.டி. தளர்வும் அளிக்க வேண்டும்.
புதுவை மாநிலத்தில் போதுமான அளவு தொழிற்சாலைகள் இல்லாததால் 10 லட்சம் மக்கள் தொகையில் 1 லட்சம் பேர் ஊரக வளர்ச்சித் துறை மூலம் வழங்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலைக்கு செல்கின்றனர்.
அதில் வழங்கப்படும் ரூ. 293 வருமானத்தை வைத்து அவர்கள் வாழவேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
இவ்வாறு சென்றால் அவர்களின் வாழ்வாதாரம் உயராமல் அவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் மட்டுமே வாழ முடியும். அவர்களின் வாழ்வா தாரத்தை உயர்த்த சலுகைகள் வழங்கி புதிய தொழிற்சாலைகளை திறக்க ஊக்குவித்தால் அவர்கள் மூலம் புதுவை மக்களும் வாழ்வில் வளர்ச்சி அடைவார்கள். மேலும் புதுவை மாநிலத்தில் ரேசன் கடைகள் மூலம் மாநில திட்டத்தின் கீழ் அரிசி வழங்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு சாய்.ஜெ.சரவணன்குமார் மனுவில் கூறியுள்ளார்.
கல்யணசுந்தரம் எம்.எல்.ஏ.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமனை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து அளித்த மனுவில், காலாப்பட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மீனவ கிராமங்கள் கடல் அரிப்பால் அதிக அளவில் பாதிக்கப்படுவதில் இருந்து பாதுகாக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை யை முன்வைத்தார்.






