என் மலர்
புதுச்சேரி

உள்ளாட்சித் துறை அலுவலகத்தை நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் முற்றுகையிட்டு கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
நகராட்சி ஊழியர்கள் போராட்டம்-தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
புதுச்சேரி:
நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அரசே நேரடியாக சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
7-வது ஊதியக்குழு பரிந்துரையை அரசு ஊழியர்களுக்கு வழங்கியது போல் 1.1.2016 முதல் முன் தேதியிட்டு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கூட்டு போராட்டக்குழு சார்பில் கடந்த 22-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
ஊழியர்களின் போராட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் அனைத்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்தனர். பட்ஜெட் கூட்டத் தொடரிலும் ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது முதல்-அமைச்சர் கோரிக்கைகளை பரிசீ லிப்பதாக தெரிவித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் தங்களது கோரிக்கையின் மீது அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று உள்ளாட்சித்துறை அலுலவகத்தை முற்றுகை யிட்டு கொட்டும் மழையில் போராட்டம் நடத்தினர். எதிர்கட்சித்தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் ஆகியோரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
எதிர்க்கட்சி தலைவர் சிவா முதல்-அமைச்சரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும்படி வலியுறுத்தினார். முதல்-அமைச்சர் ரங்கசாமி இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.