என் மலர்
புதுச்சேரி

பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்த தேரை படத்தில் காணலாம்.
மூலநாதர் கோவில் தேரோட்டம்
- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
- ஓம் நமச்சிவாய என்ற பக்தி கோசத்துடன் வடம் பிடித்து திருத்தேரை இழுத்து மூலநாதரை வணங்கி சென்றனர்.
புதுச்சேரி:
பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் பிரமோற்சவ விழா கடந்த 23-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
அதனைத்தொடர்ந்து தினமும் அபிஷேகம், சிறப்பு ஆராதனை நடைபெற்று இரவில் வண்ண விளக்குகளால் சாமி வீதி உலாவும் நடந்து வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.
கவர்னர் தமிழிசை சவுந்த ரராஜன், செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். இதில் இந்து அறநிலை நிலைய துறை ஆணையர்
சிவசங்கரன், தாசில்தார் பிரித்விராஜ் மற்றும் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். பாகூரில் முக்கிய வீதிகள் வழியே தேர் சென்று மாலையில் தேர் மீண்டும் கோவிலை வந்தடைகிறது.
தேரோட்டத்தின்போது பக்தர்கள் ஓம் நமச்சிவாய என்ற பக்தி கோசத்துடன் வடம் பிடித்து திருத்தேரை இழுத்து மூலநாதரை வணங்கி சென்றனர்.
இதற்கிடையே முதல்-அமைச்சர் ரங்கசாமி, முன்னாள் அமைச்சர் தியாகராஜன் ஆகியோர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
பாகூர் பகுதியில் விழா நடத்துவதில் இரு கோஷ்டியாக இருந்து வருவதால் அங்கு பதட்டமான சூழ்நிலை இருந்து வந்தது. இதனால் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






