search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இந்தியாவை உலகநாடுகளுக்கு தலைமை தாங்க செய்தவர் மோடி-முதல்-அமைச்சர் ரங்கசாமி பேச்சு
    X

    புத்தங்களை மத்திய மந்திரி எல்.முருகன் வெளியிட்ட காட்சி. அருகில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    இந்தியாவை உலகநாடுகளுக்கு தலைமை தாங்க செய்தவர் மோடி-முதல்-அமைச்சர் ரங்கசாமி பேச்சு

    புதுவை அரசின் செய்தி விளம்பரத்துறை சார்பில் மோடி 20, அம்பேத்கரும், மோடியும் என்ற 2 புத்தக வெளியீட்டு விழா காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் செய்தி விளம்பரத்துறை சார்பில் மோடி 20, அம்பேத்கரும், மோடியும் என்ற 2 புத்தக வெளியீட்டு விழா காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது.

    விழாவில் அரசு செயலர் வல்லவன் வரவேற்றார். மத்திய மந்திரி எல்.முருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். புதுவை கவர்னர் தமிழிசை நூல்களை வெளியிட, முதல்-அமைச்சர் ரங்கசாமி பெற்றுக் கொண்டார்.

    விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், அசோக்பாபு, தலைமை செயலர் ராஜீவ்வர்மா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகத்தை எல்லோரும் படிக்க முடியாது. எனவே நாமெல்லாம் படிப்பதற்காக தமிழில் மொழி பெயர்த்து வழங்கியுள்ளனர். 2001-ல் குஜராத் முதல்-அமைச்சராக மோடி இருந்தார். அப்போது நான் புதுவையின் முதல்-அமைச்சராக காங்கிரஸ் சார்பில் இருந்தேன்.

    மத்திய அரசு சார்பில் நடந்த கூட்டங்களில் நானும், அவரும் பங்கேற்றுள்ளோம். கூட்டத்திற்கு வரும்போது மிக சாதாரணமாகவும், எளிமையாகவும் வருவார். தனக்கான நேரம் வரும்போது ஆணித்தரமாகவும், அச்சமின்றியும் பேசுவார். அப்போது காங்கிரஸ் ஆட்சி இருந்ததால் கூட்டத்தில் பங்கேற்பவர்கள் நீங்கள் பிரதமராகி இதையெல்லாம் செய்யுங்கள் என சொல்வார்கள்.

    13 ஆண்டுக்கு பிறகு அது நிறைவேறிவிட்டது. குஜராத் மாநிலத்தின் வளர்ச்சிக்காக அவர் செய்த திட்டங்கள், அவரை பிரதமராக உயர்த்தியுள்ளது. பிரதமராக உயர்ந்த பிறகும் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ளார். நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த அதிக கவனம் செலுத்துகிறார்.

    இன்றைக்கு உலகிற்கே தலைமை தாங்கும் நாடாக இந்தியாவை கொண்டு வந்துள்ளார். அவரின் கடின உழைப்பு, பக்திதான் இதற்கு காரணம். குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்தபோது காங்கிரஸ் சார்பில் அவர் தொகுதியில்நான் பிரச்சாரம் செய்தேன்.

    அடுத்து நடந்த மத்திய அரசு கூட்டத்தில் நான் பங்கேற்ற போது அதை சுட்டிக்காட்டி என் முதுகில் தட்டி உன் கட்சி வேலையை செய்தாய் என கூறினார்.

    அவருக்கு என் மீது பிரியம் உண்டு. அவரை சந்திக்கும்போதெல்லாம் புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அவர் மாநில அந்தஸ்தை நிச்சயமாக வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×