என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்
காரைக்கால் வளர்ச்சி பெற்ற மாவட்டமாக மாற்றப்படும்- கவர்னர் தமிழிசை உறுதி
- புதுவை கவர்னர் தமிழிசை நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டையொட்டி 75 பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார்.
- காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு கவர்னர் தமிழிசை சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டையொட்டி 75 பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார்.
காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு கவர்னர் தமிழிசை சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
அன்னை தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளின் வில்லுப்பாட்டு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. அரசு பள்ளியில் இது போன்ற சிறப்பான நிகழ்வுகள் மிகவும் பாராட்டுக்குரியது. அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகமாக இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
தனியார் பள்ளிகளுக்கு மேலாக அரசாங்க பள்ளிகளின் தரத்தை உயர்த்துவது தான் அரசின் நோக்கம் ஆகும். முதல்-அமைச்சரிடம் இது சம்பந்தமாக ஆலோசனை செய்து உள்ளேன்.
கலெக்டர் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலம் பேசும் பயிற்சியை ஊக்குவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கான பணிகள் நடைபெறும்.
அரசு பள்ளிகள் மேம்படுத்தப்படும். காரைக்கால் வளர்ச்சிக்கு அத்தனை ஏற்பாடுகளும் செய்து, வளர்ச்சி அடைந்த மாவட்டமாக மாற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஆன்மீக நகரமாக உள்ள காரைக்கால் வளர்ச்சி பெறும். தேசிய தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ஜிப்மர் மருத்துவமனை போன்றவை காரைக்காலுக்கு பெருமை சேர்ப்பதாக அமையும்.
இவ்வாறு தமிழிசை கூறினார்.
தொடர்ந்து கவர்னர் தமிழிசை கோவில்பத்து அரசு உயர்நிலைப் பள்ளி, தலத்தெரு
என்.எஸ்.சி.போஸ் அரசு மேல்நிலைப்பள்ளி, வரிச்சக்குடி அரசு தொடக்கப்பள்ளி, பூவம் அரசு தொடக்கப்பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அவருடன் கலெக்டர் முகமது மன்சூர், மேல்நிலைப் பள்ளி துணை இயக்குனர் ராஜேஸ்வரி, முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். மாணவர்களிடம் பேசிய கவர்னர் தமிழிசை, அனைவரும் யோகாவை கற்றுக் கொள்ள வேண்டும். பள்ளிகளிலும் தாங்கள் வசிக்கும் வீடுகளிலும் தூய்மையை பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.






