என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
புது அவதாரமாக மீண்டும் களமிறங்கும் கண்ணன்
- புதுவை அரசியலில் ஜொலிப்பாரா?
- புதுவையின் அனைத்து கிராமங்களிலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார்.
புதுச்சேரி:
புதுவை அரசில் சபா நாயகர், அமைச்சர், எம்.பி. என பல்வேறு பதவி களில் இருந்தவர் ப.கண்ணன். புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர். சிறு வயதிலேயே தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர்.
இவர் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த போது புதுவை மாநிலம் முழுவதும் பாத யாத்திரை சென்று காங்கிரஸ் கட்சிக்கு எழுச்சியூட்டினார்.
மேலும் இவர் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்த போது புதுவையின் அனைத்து கிராமங்களிலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார். இதனால் அவருக்கு புதுவையின் அனைத்து பகுதிகளிலும் ஆதரவாளர்கள் இருந்து வந்தனர்.
இதற்கிடையே மூப்பனார் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி த.மா.கா. கட்சியை தொடங்கிய போது அவருக்கு கண்ணன் ஆதரவு தெரிவித்தார். மேலும் புதுவை த.மா.கா. தலைவராக இருந்து வந்தார். அதன்பிறகு புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ், புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் என கண்ணன் தனிகட்சி தொடங்கினார். இதன் பின்னர் தாய் கட்சியான காங்கிரசில் மீண்டும் ஐக்கியமாகி எம்.பி.யானார்.
இதன்பிறகு மீண்டும் காங்கிரசில் இருந்து விலகிய கண்ணன் அ.தி.மு.க.வில் இணைந்து சட்டசபை தேர்தலில் ராஜ்பவன் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அவரது சிஷ்யனான தற்போது அமைச்சராக உள்ள லட்சுமி நாராயணனால் தோற்கடிக்கப்பட்டார்.
அதன்பிறகு கண்ணன் அ.தி.மு.க.வில் கட்சி பணியாற்றாமல் ஒதுங்கியே இருந்தார். அதனை தொடர்ந்து கடந்த 2021 மார்ச் மாதம் டெல்லியில் மத்திய மந்திரிகள் முன்னிலையில் கண்ணன் பா.ஜனதாவில் இணைந்தார்.
ஆனால் அப்போது நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் கடந்த 2 ஆண்டுகளாக மவுனமாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் மணிப்பூரில் நடந்த கலவரம் மற்றும் சம்பவத்தை கண்டித்து முன்னாள் எம்.பி. கண்ணன் பா.ஜனதாவில் இருந்து விலகியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மணிப்பூர் மாநிலத்தில் நடந்தேறிய பெண்களுக்கு எதிரான மிகவும் அவமானகரமான செயல் இந்தியர்களை மட்டுமல்ல உலக மக்களின் மனசாட்சியை உலுக்கி மிகப் பெரிய கேவலமான நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
இந்த செயலுக்கு எந்தவித சாக்குபோக்கும் சொல்லாமல் மணிப்பூர் முதல்-அமைச்சரை பதவியிலிருந்து நீக்கி ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.
பெண் குலத்துக்கு அளிக்கப்பட்ட இந்த மாதிரியான கொடூரத்தை எந்த வகையான மற்ற குற்றங்களுடன் ஒப்பிடவே முடியாது. இந்த கொடுமையை கண்டிக்க எந்த வ ா ர் த் தை யு ம் எனக்கு கிடை க்கவில்லை. இதுதொடர்பாக என்னுடை ய கடுமையான கண்டனங்களை மத்திய பா.ஜ.க. அரசுக்கும், மணிப்பூர் மாநில அரசுக்கும் தெரிவித்து க்கொள்கிறேன்.
அதிகாரப்பூர்வமாக இப்போது நான் அறிவிக்க விரும்புவது, பா.ஜ.க.வுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் தொடர்பும் அறவே இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுமக்களுக்கான எனது பணியும், போராட்டமும் என்றும் தொடரும் என தெரிவித்துள்ளார். பாரதீய ஜனதாவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என அறிவித்ததன் மூலம், அக்கட்சியில் இருந்து கண்ணன் விலகியது உறுதியாகி உள்ளது.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பா.ஜனதாவுக்கு கண்டனம் தெரிவித்து கண்ணன் விலகியிருப்பது அவர் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.






