என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
கோவில் நிலத்தை அபகரித்து வீட்டுமனைகளாக விற்பனை
- அரசு அலுவலகங்களில் இருந்த ஆவணங்களை பெற்று ஆய்வு செய்தனர்
- புதுவையை சேர்ந்த சின்னராசு மற்றும் சிலர் போலி ஆவணம் தயாரித்து அதை வீட்டு மனைகளாக விற்றது தெரிய வந்தது.
புதுச்சேரி:
புதுவை பாரதி வீதி காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 64 ஆயிரத்து 35 சதுர அடி விவசாய நிலம் ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெருவில் உள்ளது.
ரூ.12 கோடியே 49 லட்சத்து 52 ஆயிரம் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்து விட்டதாக புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் கோவில் நிர்வாகத்தினர் புகார் அளித்தனர். இதையடுத்து டி.ஜி.பி. உத்தரவின்பேரில் சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு மோகன்குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
அந்த சிறப்பு படையினர் தனிக்கவனம் செலுத்தி நிலம் சம்பந்தப்பட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் இருந்த ஆவணங்களை பெற்று ஆய்வு செய்தனர். மேலும் பல்வேறு அரசு அதிகாரிகள், பிற நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் 64 ஆயிரத்து 35 சதுர அடி நிலத்தில் 31 ஆயிரத்து 204 சதுர அடி நில பகுதியை சென்னையை சேர்ந்த ரத்தினவேல், அவரின் மனைவி மோகனசுந்திரி, மனோகரன், புதுவையை சேர்ந்த சின்னராசு மற்றும் சிலர் போலி ஆவணம் தயாரித்து அதை வீட்டு மனைகளாக விற்றது தெரிய வந்தது.
அனைவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மொத்த சொத்துக்கும் முத்தியால்பேட்டையை சேர்ந்த தச்சு தொழிலாளி பெரியநாயகிசாமி என்ற அருள்ராஜ்(71), அவரின் மகன் ஆரோக்கியதாஸ் என்ற அன்பு(37), முன்னாள் ராணுவ வீரர் மணிகண்டன்(43) மற்றும் சிலர் போலியாக உயில் சாசனம் தயாரித்து கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்து, அதில் 32 ஆயிரத்து 831 சதுர அடி நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து 4 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். அவர்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். வழக்கில் சிறப்பாக விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு மோகன்குமார், இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், கணேசன், போலீசாரை சட்டஒழுங்கு சீனியர்சூப்பிரண்டு நாராசைதன்யா பாராட்டினார்.






