என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காரைக்காலில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் -  ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்
    X

    கோப்பு படம்

    காரைக்காலில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் - ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்

    • காரைக்காலில் வயிற்றுப் போக்கு காரணமாக அப்பகுதி மக்களிடையே பதட்டம் நிலவி வருகிறது.
    • சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காரைக்காலில் வயிற்றுப் போக்கு காரணமாக அப்பகுதி மக்களிடையே பதட்டம் நிலவி வருகிறது. சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 பேருக்கு காலரா நோய் ஏற்பட்டுள்ளது. ஒரு சில அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    முதல்-அமைச்சர் நேரில் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன் ரூ.80 கோடியில் பணிகளை தொடங்க உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

    இந்த பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், கண்காணிக்கவும் ஒரு சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரியை அரசு நியமிக்க வேண்டும். மக்களின் பதட்டம் தணியும் வரை தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களை அரசு நடத்த வேண்டும். 30 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட குடிநீர் குழாய்களின் காரணமாகவே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதை இரவு, பகல் பாராமல் பணிகளை மேற்கொண்டு முடிக்க வேண்டும்.

    அசாதாரணமான சூழலில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி அரசியல் செய்வது ஏற்கத்தக்கதல்ல. கூட்டணி அரசு அமைந்து ஒரு ஆண்டுதான் ஆகிறது. இதில் பாதி நாட்கள் கொரோனா பணிகளில் சென்று விட்டது. அரசின் மீது வீண் விமர்சனங்களை நாராயணசாமி வைப்பது ஏற்புடையதல்ல.

    5 ஆண்டுகளாக ஆட்சி செய்த தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி அரசு காரைக் காலுக்கு என்னென்ன பணிகளை செய்தது என்பதை நாராயணசாமி பட்டியலிடுவாரா?

    காரைக்கால் மாவட்டத் திற்கு காங்கிரஸ் கட்சியில் எந்த நலத்திட்டத்தையும் செய்யவில்லை என மக்கள் நன்கு அறிவர். இதுபோன்ற அசாதாரணமான சூழலில் மக்களுக்கும் அரசுக்கும் நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். காரைக்கால் மீது அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×