search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வதந்திகளை நம்ப வேண்டாம் ஜிப்மர் சேவை கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை- இயக்குனர் விளக்கம்
    X

    வதந்திகளை நம்ப வேண்டாம் ஜிப்மர் சேவை கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை- இயக்குனர் விளக்கம்

    • மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் எந்த குறைப்பும் செய்யவில்லை, நிதி பற்றாக்குறையும் ஏற்படவில்லை.
    • ஜிப்மர் வளாகத்தில் மக்கள் மருந்தகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேட்டில் மத்திய அரசு தன்னாட்சி நிறுவனமான ஜிப்மர் ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது.

    இங்கு புதுவை மட்டுமின்றி, தமிழகம், கேரளா உட்பட தென்மாநிலங்களை சேர்ந்த நோயாளிகள் ஆயிரக்கணக்கில் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஜிப்மரில் 63 வகையான உயர் சிகிச்சைக்கு கட்டணம் வசூலிக்க நிர்வாகம் சுற்றறிக்கை பிறப்பித்தது.

    இதற்கு புதுவை அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    அதோடு ஜிப்மரில் நோயாளிகளுக்கு மருந்துகள் தருவதில்லை, மத்திய அரசு ஜிப்மரை புறக்கணிக்கிறது, டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது என அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் புதுவை ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஜிப்மரில் மருந்துகள், டாக்டர்கள் பற்றாக்குறை என வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. கடந்த 5 ஆண்டில் ஜிப்மருக்கான ஆண்டு நிதி ஒதுக்கீடு உயர்ந்துள்ளது.

    2023-24ம் நிதியாண்டுக்கு ஜிப்மருக்கு ரூ.1,490 கோடியே 43 லட்சம் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

    எய்ம்ஸ், சண்டிகர் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் நிதியை விட இது கூடுதல் நிதியாகும். மூலதன வசதிகளை உருவாக்க ரூ.300 கோடி, பொது செலவுகளுக்கு ரூ.355 கோடி, சம்பளத்துக்கு ரூ.835.43 கோடி ஒதுக்கப்பட்டுள்து. மூலதன வசதி மானியம் 2½ மடங்கு அதிகரித்துள்ளது.

    மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் எந்த குறைப்பும் செய்யவில்லை, நிதி பற்றாக்குறையும் ஏற்படவில்லை. கொரோனா தாக்கம் இருந்த நிலையிலும் ஜிப்மரில் நோயாளிகளின் வசதிக்காக டிஜிட்டல் ஆஞ்சியோகிராபி, புதிய லீனியர், கிருமிநீக்க துறை நவீனமயம், அல்ட்ரா சவுண்ட், ஹிமாட்டலஜி அனலைசர், உட்பட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    ஜிப்மர் ஒட்டுமொத்த செயல்பாட்டை மேம்படுத்த பல துறைகளிலும் புதிய உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளது.

    பிரதமர், மத்திய அரசின் கொள்கைக்கு ஏற்ப காகித மருந்து சீட்டுகள் தவிர்க்கப்பட்டு மின் சீட்டுகள் வழங்கப்படுகிறது. ஜிப்மரில் 786 பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அனுமதித்துள்ளது.

    இதில் 252 டாக்டர்கள், 431 செவிலியர்கள், 50-க்கும் மேற்பட்ட தொழில் நுட்ப நல்லுர்கள் அடங்குவர். 10 ஆண்டுக்கு பிறகு ஜிப்மரில் புதிய பணியிடங்கள் நிரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி 70 முதுநிலை டாக்டர்கள், 550 செவிலியர்கள் தேர்வு செய்யும் நடைமுறைகள் நிறைவு பெற்றுள்ளன.

    இவர்கள் இன்னும் 2 மாதத்தில் ஜிப்மரில் பணியில் சேர உள்ளனர். ஆயுஷ்மான் பாரத் திட்ட விதிகளின்படி முழு வசதிகள் வழங்கப்படுகிறது. வெளிப்புற நோயாளிகளுக்கும் தொடர்ந்து இலவச மருந்துகள் வழங்கப்படுகிறது.

    தற்போதுள்ள சேவைகளுக்கான கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை.

    வழக்கமான இலவச மருந்தகம் தவிர, அம்ரித் மருந்துகம், 24மணி நேர தனியார் மருந்தகமும் அமைக்கப்பட்டுள்ளது. இவை மலிவு விலையில் நோயாளிகளுக்கு மருந்துகள், அறுவை சிகிச்சைக்கு தேவையான கருவிகளை வழங்குகின்றன. ஜிப்மர் வளாகத்தில் மக்கள் மருந்தகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    எப்போதும் போல புதுவை, சுற்றியுள்ள மக்களுக்கும், நோயாளிகளுக்கும் சிறந்த மருத்துவ சேவைகளை வழங்குவதில் ஜிப்மர் உறுதியாக உள்ளது. இன்னும் பல உயரங்களை எட்ட முழு சக்தியுடன் ஜிப்மர் செயல்பட்டு வருகிறது.

    ஜிப்மர் பற்றி வெளியாகும் அனைத்து வதந்திகள், தவறான தக வல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜிப்மர் நிர்வாகம் விரும்புகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×