என் மலர்
புதுச்சேரி

புதுவை காமராஜர் மணி மண்டபத்தில் நடந்த பேரிடர் கால நண்பன் நிகழ்ச்சியில் தன்னார்வலர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி சான்றிதழ் வழங்கிய காட்சி.
சமூக தன்னார்வலர்களுக்கு பேரிடர் கால பயிற்சி
- புதுவை, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 23 மாநிலங்களில் அடிக்கடி பேரிடர் பாதிப்பு ஏற்படுகிறது. பேரிடர் காலங்களில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை இணைந்து செயல்படுகிறது.
- முதல்கட்டமாக 100 தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் தொடங்கியது.
புதுச்சேரி:
புதுவை, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 23 மாநிலங்களில் அடிக்கடி பேரிடர் பாதிப்பு ஏற்படுகிறது.
பேரிடர் காலங்களில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை இணைந்து செயல்படுகிறது. இவர்களுடன் அந்தந்த பகுதியில் உள்ள தன்னார்வலர்களையும், பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடுத்துவதற்காக ஆப்த மித்ரா திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தில் புதுவை மாநிலத்தில் 500 தன்னார்வலர்கள் இணைக்கப்பட உள்ளனர். முதல்கட்டமாக 100 தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் தொடங்கியது. காமராஜர் மணிமண்டபத்தில் பயிற்சி முகாமினை முதல்-அமைச்சர் ரங்கசாமி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலர் ஜான்குமார், மாவட்ட கலெக்டர் வல்லவன், துணை கலெக்டர்கள் தமிழ்ச்செல்வன், கந்தசாமி, இளங்கோ, துணை தாசில்தார் ராஜலட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் ஆப்த மித்ரா கையேட்டினை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட, அதனை முதல் அமைச்சரின் பாராளுமன்ற செயலர் ஜான்குமார் பெற்றுக்கொண்டார்.
முன்னதாக குடிமை பாதுகாப்பு தன்னார்வலர்களுக்கு சீருடை, அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்துபல்வேறு துறைகளின் திறனை வெளிப்படுத்தும் கண்காட்சியினை முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார், இதில் தீயணைப்புத்துறையினர் தங்களது மீட்பு வாகனங்கள், உபகரணங்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.
இதேபோல் சுகாதாரத்துறை உயிர்காக்கும் கருவிகளை காட்சிப்படுத்தி இருந்தது. மேலும் காவல் துறை, கடலோர காவல் படை மற்றும் துறைமுகத் துறையினரின் உபகரணங்களும் காட்சி படுத்தப்பட்டிருந்தது. இதனை முதல்-அமைச்சர ரங்கசாமி, ஜான்குமார் எம்.எல்.எ. மற்றும அதிகாரிகள் பார்வையிட்டனர்.
வருகிற 21-ந் தேதி வரை நடைபெறும் முகாமிற்கு பின் தன்னார்வலர்களுக்கு ரூ.2 லட்சத்திற்கான காப்பீடு, பேரிடர் காலங்களில் மீட்பு பணிக்கு பயன்படுத்தப்படும் 14 பொருட்கள் அடங்கிய கிட், பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
பயிற்சி முகாமில் நீச்சல், மரம் வெட்டுதல், சாலைகளில் தடைகளை அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.






