என் மலர்
புதுச்சேரி

கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கன்னியகோவில் தீமிதி திருவிழாவையொட்டி 5 கிராம முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்த காட்சி.
பச்சைவாழி அம்மன் கோவிலில் நாளை மறுநாள் தீமிதி விழா
- போக்குவரத்து மாற்றம்
- தீமிதி திருவிழாவையொட்டி இந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாலை 4 மணியில் இருந்து 8 மணி வரை மாற்றம் செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
பாகூர் அடுத்த கன்னியகோவில் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மன்னாதீஸ்வரர் உடனுரை பச்சைவாழி அம்மன் கோவில் உள்ளது. கோவிலில் தீமிதி விழா நாளை மறுநாள் 11 -ந் தேதி நடைபெறுகிறது.
இதற்கான கொடியேற்று விழா கடந்த 4-ந் தேதி நடந்தது. அதனை தொடர்ந்து தினந்தோறும் காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு முருகர், விநாயகர், மன்னாதீஸ்வரர் பச்சை வாழியம்மன் மற்றும் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை ஆகிய சாமிகள் அலங்கரித்து வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
வரும் 11-ந்தேதி தீமிதி திருவிழா, பிற்பகல் 12 மணியளவில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை திருக் கல்யாணம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு கோவில் எதிரில் தீமிதிவிழா நடைபெற உள்ளது.
விழாவையொட்டி கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் சூப்பிரண்டு வம்சித்த ரெட்டி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் 23 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட உள்ளது. தீமிதி திருவிழாவையொட்டி இந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாலை 4 மணியில் இருந்து 8 மணி வரை மாற்றம் செய்யப்படுகிறது.
கடலூர் பகுதியில் இருந்து வரும் புதுவை செல்லும் வாகனங்கள் முள்ளோடையில் இருந்து திருப்பி விடப்பட்டு பாகூர் வழியாக பின்னாச்சிகுப்பம் ,கிருமாம்பாக்கம் வந்து சாலையில் இருந்து புதுவை செல்லும். இதேபோல புதுவையில் இருந்து வரும் வாகனங்கள் பின்னாச்சிகுப்பம் வழியாக முள்ளோடை வந்து கடலூர் செல்ல வேண்டும் என போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் தீமிதி திருவிழா குறித்து நேற்று கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் கூறியதாவது :-
தீமிதி திருவிழாவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும், தீமிதி திருவிழாவிற்கு கடலூர் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என்றார்.






