என் மலர்
புதுச்சேரி

புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை படத்தில் காணலாம்.
மொழியியல் பண்பாட்டு நிறுவனத்தை இயக்குவதில் தொடரும் காலதாமதம்-தமிழ் அறிஞர்கள் குற்றச்சாட்டு
- மத்திய தேர்வாணையம் வரை கோப்பு அனுப்பி காலியிடங்களை நிரப்ப தேவையில்லை. மாநில அரசே முடிவு செய்து, பேராசிரியர் பணியி டங்களை நிரப்ப முடியும்.
- இந்த நிறுவனத்தை இயக்குவதில் காலம் தாழ்த்துவது தமிழுக்கு செய்யும் துரோகம் என தமிழ் அறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 1986-ம் ஆண்டு முதல் இயங்குகிறது.
மானிடவியல் இலக்கியம், பண்பாடு, கவிதை ஆய்வு செய்து ஆவணப்படுத்தலில் இந்த நிறுவனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழ் தொடர்பான முக்கிய ஆவணங்களை உலகளாவிய அளவில் கொண்டு செல்லும் வகையில் பல நூல்களை வெளி யிட்டுள்ளது.
26 அறக்கட்டளை இருக்கைகள் அமைக்கப் பட்டு சொற்பொழிவுகளும் நூல்களாக்கப்பட்டுள்ளன.
பிறமாநிலத்திலிருந்து வரும் கவர்னர் தொடங்கி அதிகாரிகள் வரையில் உள்ளோருக்கும், வெளிநாட்டவருக்கும் தமிழ் கற்று தரும் பணியிலும் ஈடுபட்டனர். ஆனால் இந்த சூழல் தற்போது தலைகீழாக மாறியுள்ளது.
இந்நிறுவனத்தில் இலக்கியம், மொழியியல், பண்பாட்டு இயல் என 3 துறைகளும், ஆராய்ச்சி மாணவர்களுக்கு சிறந்த நூல்கள் இடம் பெற்ற நூலகமும் உள்ளது. இங்கு, 12 பேராசிரியர்கள் படிப்படியாக ஓய்வு பெற்ற போதும் பணியிடத்தை நிரப்பவில்லை. மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் சொசைட்டியா கதான் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் மத்திய தேர்வாணையம் வரை கோப்பு அனுப்பி காலியிடங்களை நிரப்ப தேவையில்லை. மாநில அரசே முடிவு செய்து, பேராசிரியர் பணியி டங்களை நிரப்ப முடியும்.
பேராசிரியர் பணியிடத்தில் முதல் கட்டமாக 6 இடங்களை நிரப்ப கூட்டம் நடத்தி பல ஆண்டுகளாகியும் செயல்படுத்தவே இல்லை.
பேராசிரியர்கள் மாணவர்கள் என யாரும் தற்போது இல்லை. இந்த நிறுவனத்தை இயக்குவதில் காலம் தாழ்த்துவது தமிழுக்கு செய்யும் துரோகம் என தமிழ் அறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அவர்கள் மேலும் கூறியதாவது:-
பல ஆண்டுகளாக மொழியியல் பண்பாட்டு நிறுவனத்தில் பிரச்சினை நீடித்து வருகிறது. கடந்த 2021 ஏப்ரல் 5-ந் தேதி கவர்னர் தமிழிசை நேரில் சென்று இந்த நிறுவனத்தை ஆய்வு செய்தார். பின்னர், 6 பேராசிரியர காலியிடங்களை நிரப்பி, நிறுவனம் வெளியிட்ட அனைத்து நூல்களையும் மின்னணு நூல்களாக மாற்றவும், நிறுவன வளர்ச்சிக்கு அத்தனை வசதிகளையும் செய்வதாக வாக்குறுதி அளித்தார்.
ஆனால் கவர்னர் தமிழிசை கூறிய ஏதும் நடக்கவில்லை. உயர் கல்வித்துறையின் கீழ் செயல்படவேண்டிய மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் கலை பண்பாட்டுதுறையின் கீழ் செயல்படுவதுதான் விநோதம். காலதாமதமின்றி மீண்டும் பொலிவுடன் நிறுவனத்தை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தமிழ் அறிஞர்கள் கூறினர்.






