என் மலர்
புதுச்சேரி

சென்னை ஐ.ஐ.டி. அதிகாரிகளுடன் அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆலோசனை நடத்திய காட்சி.
சென்னை ஐ.ஐ.டி.அதிகாரிகளுடன் ஆலோசனை
- அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் நடந்தது
- ஆரோவில் அருகே அமைத்தால் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் தங்கி செல்ல வசதியாக இருக்கும் என கருத்து தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரி:
ஜி-20 தலைமை பொறுப்பேற்றுள்ள இந்தியா உலகம் ஒரே குடும்பம் என்ற உணர்வில் பல்வேறு உறுப்பினர்களிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை ஐ.ஐ.டி. கடந்த ஜனவரியில் கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்ப பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்தியது. இதில் அனைத்து உறுப்பினர்களின் சமமான பங்குடன் ஐ.ஐ.டி மூலம் ஆராய்ச்சி பூங்கா நிறுவ முடிவு செய்யப்பட்டது. இந்த தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி பூங்காவை சர்வதேச நகரமான ஆரோவில் அருகே அமைத்தால் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் தங்கி செல்ல வசதியாக இருக்கும் என கருத்து தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவின்பேரில் ஐ.ஐ.டி அதிகாரிகளுடன் புதுவை அமைச்சர் லட்சுமி நாராயணன், தொழில்துறை இயக்குனர் ருத்ரகவுடு, தகவல் தொழில்நுட்பத்துறை இயக்குனர் மோகன்குமார் ஆகியோர் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். 2026-க்குள் அமைய திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச தொழில் பூங்காவில் உலகளாவிய ஆராய்ச்சி நிறுவனரங்கம், ஆராய்ச்சியாளர்கள் தங்கள் நிறுவனத்தை அமைப்பர்.
உலகின் மிகப்பெரிய ஆராய்ச்சி மையம் அமைப்பதன் மூலம் புதுவையில் பொருளாதார வளர்ச்சியும், வேலை வாய்ப்பும் பெருகும் வாய்ப்பு உள்ளது. ஆராய்ச்சி பூங்கா அமைக்க 100 ஏக்கர் நிலம் தேவை என சென்னை ஐ.ஐ.டி. தெரிவித்துள்ளது. புதுவை கரசூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இந்த ஆராய்ச்சி பூங்கா அமைக்க புதுவை அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதியை வழங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.






