search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பிரதமருக்கு எதிராக சதியில் ஈடுபடும்அமைப்புகளுக்கு காங்கிரஸ் ஆதரவு-அன்பழகன் குற்றச்சாட்டு
    X

    கோப்பு படம்.

    பிரதமருக்கு எதிராக சதியில் ஈடுபடும்அமைப்புகளுக்கு காங்கிரஸ் ஆதரவு-அன்பழகன் குற்றச்சாட்டு

    • காரைக்கால் மாவட்டத்தில் 2008-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது சுமார் 650 ஏக்கர் அரசு நிலம் மார்க் என்ற துறைமுகம் அமைத்துக்கொள்ள 30 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டது.
    • முதல்-அமைச்சர், அமைச்சர், தலைமை செயலாளர் அல்லது துறை செயலாளர் மார்க் தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தங்கள், எவ்வளவு காலம்,.?

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காரைக்கால் மாவட்டத்தில் 2008-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது சுமார் 650 ஏக்கர் அரசு நிலம் மார்க் என்ற துறைமுகம் அமைத்துக்கொள்ள 30 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டது. இந்த துறைமுகத்தை வைத்து ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்று, கடனை அடைக்க முடியாத சூழ்நிலையை செயற்கையாக உருவாக்கியுள்ளனர்.

    இந்த துறைமுகத்தை அதானி குழுமத்திற்கு கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. துறைமுகம் அரசு வழங்கிய இடம். இந்த விவகாரத்தில் எந்தவித உரிமையும் இல்லாமல் அரசு பார்வையாளராக இருப்பது தவறானது.

    அரசின் கட்டுப்பாட்டில் துறைமுகம் இருக்க வேண்டும். முதல்-அமைச்சர், அமைச்சர், தலைமை செயலாளர் அல்லது துறை செயலாளர் மார்க் தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தங்கள், எவ்வளவு காலம்,.?

    அரசுக்கு உள்ள உரிமை, தற்போதைய நிலை, எவ்வளவு கடன் பெறப்பட்டுள்ளது? தற்போது இந்த துறைமுகம் யாரிடம் கைமாற்றப்பட உள்ளது என்பது குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். புதியதாக எந்த நிறுவனம் குத்தகைக்கு எடுத்தாலும் ராயல்டியாக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தம் போட வேண்டும். துறைமுகம் கடத்தலுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

    சட்டத்திற்கு விரோதமான செயல்களும் நடைபெற்றது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என அ.தி.மு.க. பலமுறை வலியுறுத்தியுள்ளது.ஆளும் அரசை பற்றி, ஊழலை பற்றி பேச முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு எந்த தகுதியும் இல்லை. அவர் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை சொல்ல வேண்டும்.

    இந்தியாவை அவமதிக்கும் விதத்திலும், பிரதமருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் சதி செயலில் ஈடுபடும் அமைப்புகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. புதுவையில் குயில் தோப்பு விவகாரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி காரைக்காலில் இருந்து சப்-ரிஜிஸ்டரை வரவழைத்து பத்திரப்பதிவு செய்தார்.

    தாழ்த்தப்பட்ட அட்டவணை நிதியில் இருந்து பணம் எடுத்து ஒப்பந்தம் இல்லாமல் பல பகுதிகளில் ரூ.5 கோடிக்கு ஹைமாஸ் விளக்குகள் போடப்பட்டது. இது ஊழல், முறைகேடு இல்லையா? அவர் ஆட்சியில் அரிசி வாங்கியது, முட்டை வாங்கியது, இலவச துணிகள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது.

    என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி அரசு கடந்த கால காங்கிரஸ் ஊழல் ஆட்சியினருடன் சமரசமாக சென்று கொண்டிருக்கிறது.

    கடந்தகால காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஊழல் குறித்து இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது தவறான ஒன்று. ஊழல் செய்தவர்களுடன் சமரசமாக போக கூடாது. ஆதாரமற்ற குற்றசாட்டுகளை அள்ளி வீசுவதிலேயே நாராயணசாமி காலத்தை கடத்துகிறார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×