search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை மக்களின் வளர்ச்சிக்காக எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும்- முதலமைச்சர் ரங்கசாமி
    X

    ஏனாமில் நடந்த விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் ரங்கசாமிக்கு நினைவு பரிசு வழங்கியபோது எடுத்த படம்.

    புதுவை மக்களின் வளர்ச்சிக்காக எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும்- முதலமைச்சர் ரங்கசாமி

    • நான் கடந்த சட்டசபை தேர்தலில் ஏனாம் தொகுதியில் போட்டியிட்டேன்.
    • புதுவை அரசு சுற்றுலாவை மேம்படுத்த மிகுந்த கவனம் செலுத்தி தேவையான நிதியை ஒதுக்கி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை பிராந்தியமான ஏனாமில் நலத்திட்டங்களை நிறைவேற்றக்கோரி பா.ஜனதா ஆதரவாளரான சுயேச்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் கடந்த 6-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்குக்கு நேற்று திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவருக்கு உடனடியாக டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக ஏனாம் பகுதி மக்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக், முதலமைச்சர் ரங்கசாமி குறித்து அவதூறாக பேசியதுடன், அவர் ஏனாம் வந்தால் அவருக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று தெரிவித்து இருந்தார். இதை கண்டித்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் புதுவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி ஏனாம் செல்ல முடிவு செய்தார். அதன்படி நேற்று அங்கு நடைபெற்ற மக்கள் கலாசார நிறைவு விழாவில் ரங்கசாமி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    நான் கடந்த சட்டசபை தேர்தலில் ஏனாம் தொகுதியில் போட்டியிட்டேன். எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னால் உடனடியாக இங்கு வரமுடியவில்லை . ஏனாம் மக்கள் கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் கலந்துகொண்டுள்ளேன். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

    புதுவை அரசு சுற்றுலாவை மேம்படுத்த மிகுந்த கவனம் செலுத்தி தேவையான நிதியை ஒதுக்கி வருகிறது. புதுவையின் அனைத்து பிராந்திய பகுதிகளான காரைக்கால், மாகி, ஏனாம் ஆகியவை அனைத்தும் முழுமையாக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம்.

    அரசின் ஒருசில திட்டங்களை நிறைவேற்ற தாமதம் ஆகலாம். அதற்கு நம்மிடம் முழு அதிகாரம் இல்லாதது தான் காரணம். எனவே எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளது.

    நமது அரசு மத்திய அரசின் உதவியோடு சிறப்பான நிலையை அடைய அனைத்து நடவடிக்கைகள் எடுக்கும். மத்திய அரசிடம் கூடுதல் நிதியை பெறவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மத்திய அரசு புதுவையில் ஜி20 மாநாட்டின் பிரதிநிதிகள் கூட்டம் நடத்த அனுமதி அளித்துள்ளது. இது நமக்கு கிடைத்த பெருமை.

    புதுவை அரசின் டெல்லி பிரதிநிதியான மல்லாடி கிருஷ்ணாராவ் ஏனாம் மக்கள் குறைகள் குறித்து மனுவாக அளித்துள்ளார். இதில் குறிப்பாக ஏனாமில் சூதாட்ட விடுதிகள் அமைக்க கூடாது என்பது தான். சூதாட்டம் மிகவும் மோசமானது. எந்த இடத்திலும் சூதாட்ட விடுதி இருக்கக்கூடாது என்பது தான் அரசின் எண்ணம். எனவே சூதாட்ட விடுதிகளுக்கு அரசு அனுமதி அளிக்காது. புதுவை மக்களின் வளர்ச்சிக்காக எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளை ஏற்று, அவற்றை விரைவில் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்.

    விழாவில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே .டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், பாஸ்கரன், லட்சுமிகாந்தன், மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×