என் மலர்
புதுச்சேரி

மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் நடந்த பட்ட மளிப்பு விழாவில் மாணவிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்டம் வழங்கியபோது எடுத்தபடம்.
இளநிலை, முதுநிலை மாணவர்கள் 1,388 பேருக்கு பட்டம்-முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்
- மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியின் 13-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
- பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு 4.5 லட்சம் ரொக்கப்பரிசு கல்லூரி சார்பில் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியின் 13-வது பட்டமளிப்பு விழா 2 நாட்கள் நடந்தது.
2-வது நாளாக 2019-ம் ஆண்டு இளநிலை மற்றும் 2017, 2018, 2019-ம் ஆண்டு முதுநிலை மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
விழாவுக்கு மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரியின் இயக்குனரும், முதல்வருமான வெங்கடாசலபதி வரவேற்று கல்லூரியின் சிறப்புகள் குறித்து பேசினார்.
விழாவில் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கினார். பட்டமளிப்பு விழாவின் போது, இளநிலை தொழில்நுட்ப பிரிவில் 758 மாணவ-மாணவிகளுக்கும், முதுநிலை பிரிவில் 630 பேருக்கும் பட்டம் வழங்கப்பட்டன.
மேலும் தங்கப்பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு 9 பவுன் தங்க நாணயம் மற்றும் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு 4.5 லட்சம் ரொக்கப்பரிசு கல்லூரி சார்பில் வழங்கப்பட்டது.
விழாவில் மணக்குள விநாயகர் கல்லூரியின் இயக்குனர்ராஜகோவிந்தன், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமிக் டீன்கள் அன்புமலர், அறிவழகர், ஆராய்ச்சித்துறை டீன் வேல்முருகன், வேலை வாய்ப்புத் துறை அதிகாரி கைலாசம், ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் முதல்வர் மனோகரன், கலை அறிவியல் கல்லூரி டீன் முத்துலட்சுமி, அலைட் ஹெல்த் சயின்ஸ் டீன் கோபால், வேளாண் மற்றும் தோட்டக் கலை துறை டீன் முகமது யாசின், பிசியோ தெரபி டீன் சிதம்பரம், சட்டக்கல்வித் துறை டீன் சந்திரசேகர் மற்றும் துறை தலை வர்கள் கலந்து கொண்டனர்.
பட்டமளிப்பு விழாவினை தொடர்ந்து, மணக்குள விநாயகர் கல்லூரி மற்றும் ஏஐசிடிஇ இணைந்து அமைத்துள்ள நவீன வசதிகளுடன் கூடிய யோசனை ஆய்வகத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
முடிவில் கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய்தீன் நன்றி கூறினார்.






