என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பழங்குடியின மக்களுக்கு பட்டா- வீடுகள் வழங்கப்படும்-  முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதி
    X

    ரங்கசாமி

    பழங்குடியின மக்களுக்கு பட்டா- வீடுகள் வழங்கப்படும்- முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதி

    • பாகூர் தொகுதிக்குட்பட்ட இருளன்சந்தை கிராமத்தில் உள்ள இருளர் இன மக்கள் கடந்த ஆண்டு பெய்த கனமழை, ஆற்று வெள்ளத்தால் அனைவரின் குடிசைகளும் முழுமையாக நீரில் மூழ்கியதால் அரசு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • இருளன்சந்தை வருவாய் கிராமத்தில் புறம்போக்கு அல்லது தனியார் நிலங்கள் பற்றிய தகவல்களை துணைகலெக்டரிடம் கோரப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:-

    செந்தில்குமார் (தி.மு.க.): பாகூர் தொகுதிக்குட்பட்ட இருளன்சந்தை கிராமத்தில் உள்ள இருளர் இன மக்கள் கடந்த ஆண்டு பெய்த கனமழை, ஆற்று வெள்ளத்தால் அனைவரின் குடிசைகளும் முழுமையாக நீரில் மூழ்கியதால் அரசு இடத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்? இந்த மக்களுக்கு பட்டா மற்றும் தொகுப்பு வீடுகள் கட்டித்தர அரசு முன்வருமா?

    அமைச்சர் சந்திர பிரியங்கா:- பாகூர் தொகுதி இருளன்சந்தை வருவாய் கிராமத்தில் புறம்போக்கு அல்லது தனியார் நிலங்கள் பற்றிய தகவல்களை துணைகலெக்டரிடம் கோரப்பட்டுள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் நிதி நிலைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

    செந்தில்குமார்: ஓராண்டாக நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால் சுணக்கமாக பணிகள் நடக்கிறது. அவசர பணியாக எடுத்து செய்து தர வேண்டும்.

    நிதி நிலைமை என்ற வார்த்தையை கருத்தில்கொள்ளக்கூடாது. அம்மக்களின் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 10 சதவீதம்தான் செலவு செய்கிறோம். நிதிநிலைமை என்பது ஏற்புடையதல்ல.

    கல்யாணசுந்தரம்: பிள்ளைச்சாவடியிலும் இதேபோல ஆய்வு செய்தனர். கருவடிகுப்பத்தில் 48 பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நிதியில்லை என்று கூறக்கூடாது. அவர்களுக்கு இலவச பட்டா, வீடு வழங்க வேண்டும்.

    எதிர்கட்சித்தலைவர் சிவா: கடந்த 10 ஆண்டாக பழங்குடியின மக்களுக்கு மனைப்பட்டா வழங்கப்படாமல் உள்ளது. அவர்களுக்கு மஞ் சள்கார்டு வழங்கியுள்ளனர். மஞ்சள்கார்டு கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு முடிவு செய்து உடனடியாக மனைப்பட்டா, வீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

    அங்காளன்: என் தொகுதியிலும் வசிக்கும் நரிக்குறவர்களுக்கு மனைப்பட்டா இல்லை. அதிகாரிகள் நிலம் இல்லை என்கின்றனர்.

    இலங்கை அகதிகள் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்க ளுக்கும் மனைப்பட்டா வழங்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் சிறப்புக்கூறு நிதியை அந்த திட்டங்களுக்கு மட்டும் செலவிட்டால் பல திட்டங்களை செயல்படுத்த முடியும். நிதியை மாற்றம் செய்வதால்தான் சிக்கல் ஏற்படுகிறது.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி: பழங்குடியின மக்களின் மீது அரசுக்கு அக்கறை உள்ளது. அவர்களுக்கு பட்டா, வீடு வழங்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். அவர்கள் வசிக்கும் இடத்திலேயே பட்டா, வீடு கேட்கின்றனர். மாற்று இடத்தில் அளித்தால் செல்ல மறுக்கின்றனர். அவரவர் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் நிலத்தை கண்டறிந்து கொடுத்தாலோ, அரசு புறம்போக்கு நிலத்தை சுட்டிக்காட்டினால் அவர்க ளுக்கு பட்டா வழங்கப்படும், வீடுகளும் கட்டித்தரப்படும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    Next Story
    ×