என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆந்திர மாநில பூங்காவில் வைக்க புதுவையில் தயாராகும் விலங்குகளின் சிலை

    • கடல்வாழ் உயிரினங்களான ஆமை, ஆக்டோபஸ் உருவ சிலைகள் வடிக்கப்பட்டுள்ளது.
    • தெலுங்கானா மாநில அரசும் ரூ.25 லட்சம் செலவில் 100 சதுர அடியில் (3டி) முப்பரிமாணத்தில் செயற்கை காடு ஒன்று அமைக்கவுள்ளது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் வன உயிரினங்களை காப்பதற்கு பொதுமக்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

    இதையொட்டி ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள புலிவேந்தலா பூங்காவில் பார்வையாளர்களை கவரும் வகையில் வன உயிரினங்களின் தத்ரூபமான சிலைகளை ஆந்திர அரசு அமைக்க உள்ளது.

    இதற்காக புதுவை முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் இயங்கும் வைல்ட் லைப் ஆர்ட் கேலரி நிறுவனர் பூபேஷ் குப்தாவிடம் ரூ.40 லட்சம் செலவில் சிலை மற்றும் ஓவியங்கள் தயார் செய்து பூங்காவில் அமைக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது.

    அதையடுத்து, கைவினை கிராமத்தில் பெரோசிமெண்ட், பைபரை கொண்டு புலி, மான், கரடி, குரங்கு, மயில் உள்ளிட்டவை அதன் நிஜ உருவ அமைப்பில் தத்ரூபமாக தயாராகியுள்ளது. மற்றும் செங்குத்தாக நிற்கும் பாறைதூணில் பச்சை கிளி, அணில், பச்சோந்தி, காட்டு முயல், மலை பாம்பு, உடும்பு, காட்டுப்பல்லி, மேலும் கடல்வாழ் உயிரினங்களான ஆமை, ஆக்டோபஸ் உருவ சிலைகள் வடிக்கப்பட்டுள்ளது.

    மேலும், உலகிலேயே ஆந்திராவில் மட்டுமே தரையில் வாழும் 'ஜடன் கோர்சர்' பறவை சிலை, கடப்பா கல்லில் வரையப்பட்ட பறவைகள் ஓவியம் என 40 உயிரினங்களின் படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதேபோன்று, தெலுங்கானா மாநில அரசும் ரூ.25 லட்சம் செலவில் 100 சதுர அடியில் (3டி) முப்பரிமாணத்தில் செயற்கை காடு ஒன்று அமைக்கவுள்ளது.

    அதற்கான வன உயிரினங்களை தயார் செய்யும் பணியும் முழு வீச்சில் நடந்து வருகிறது.

    மேலும் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு இதே போன்ற பணிகள் நடந்து வருகிறது.

    Next Story
    ×