என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளை திறக்க வேண்டும்-சிவா எம்.எல்.ஏ. கோரிக்கை
- புதுவையில் கிராமப் புறத்தில் இருந்து லாஸ்பேட்டையில் உள்ள கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிட மாணவர்கள் விடுதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இதனால் கிராமப்புற மாணவியர்கள் தங்கி பயில முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
அமைச்சர் சந்திரபிரி யங்காவிடம் எதிர்கட்சி தலைவர் சிவா அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் கிராமப் புறத்தில் இருந்து லாஸ்பேட்டையில் உள்ள கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிட மாணவர்கள் விடுதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோல் காரைக்காலில் உள்ள விடுதி மூடப்பட்டுள்ளதால் புதுவை, மாகி, ஏனாமில் இருந்து காரைக்காலுக்கு கல்வி, பயில செல்லும் மாணவர்களும் பாதிக்கப்ப ட்டுள்ளனர்.
அதுபோல் வில்லியனூர் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த கிராமப்புற விடுதியில் சுமார் 250 பேர் தங்கி பயின்றனர். அந்த விடுதி கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவை காரணம் காட்டி மூடப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற மாணவியர்கள் தங்கி பயில முடியாமல் தினமும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் விடுதிகளில் மாணவ-மாணவிகளுக்கு வாரத்தில் ஒருநாள் வழங்கப்பட்டு வந்த அசைவ உணவு நிறுத்தப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் சோப்பு, பெட்ஷிட் உள்ளவைகளும் முறையாக வழங்கப்படவில்லை.
இதனால் செயல்படும் விடுதிகளில்கூட மாணவ-மாணவிகள் தங்கி, கல்வி பயிலவும் முடியவில்லை. அதுபோல் செயல்படுகின்ற விடுதிகளிலும் அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவ-மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே மூடப்பட்டுள்ள விடுதிகளை உடனடியாக புனரமைப்பு பணிகளை முடித்து திறக்க வேண்டும். செயல்படும் விடுதிகளில் உரிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
வில்லியனூர் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மூடப்பட்ட விடுதியையும் திறக்க வேண்டும். நிறுத்தப்பட்டுள்ள அசைவ உணவு, சோப்பு, பெட்ஷிட் உள்ளிட்டவைகளையும் உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் சிவா கூறியுள்ளார்.






