search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை பிரெஞ்சு ஆதிக்கத்தின் பிடியில் இருந்து 12 தொழிலாளர்கள் உயிர் தியாகத்துடன் போராடி பெற்ற 8 மணி நேர வேலை சட்டம்
    X

    புதுவை பிரெஞ்சு ஆதிக்கத்தின் பிடியில் இருந்து 12 தொழிலாளர்கள் உயிர் தியாகத்துடன் போராடி பெற்ற 8 மணி நேர வேலை சட்டம்

    • 1917-ல் ரஷ்யாவில் லெனின் தலைமையில் புரட்சி ஏற்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
    • புதுவையில் பஞ்சாலை தொழிலாளர்கள்தான் பெருமளவில் இருந்தனர்.

    புதுச்சேரி:

    18-ம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் நில பிரபுக்கள், ஜமீன்தார்கள், தொழிலதிபர்கள் தங்களிடம் வேலைபார்க்கும் தொழிலாளர்களை நசுக்கி பிழிந்து வந்தனர்.

    1986-ம் ஆண்டு மே 4-ந்தேதி அமெரிக்காவில் சிகாகோ நகரில் ரொட்டி தயாரிப்பு நிறுவன தொழிலாளர்கள் அதிக பணி நேர வேலை, குறைந்த கூலி ஆகியவற்றை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் 8 தொழிலாளர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    அன்று தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காரணத்தால் இந்த தகவல் 6 மாதத்திற்கு பிறகு ஜெர்மனில் இருந்த காரல்மார்க்சை சென்றடைந்தது. இதைத்தொடர்ந்து அவர் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மே 1-ந் தேதியை தொழிலாளர் தினமாக கடைபிடிக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.

    இதையடுத்து பல நாடுகள் மே 1-ந்தேதியை தொழிலாளர் தினமாக கடைபிடிக்க தொடங்கியது. 1917-ல் ரஷ்யாவில் லெனின் தலைமையில் புரட்சி ஏற்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த ஆட்சி மாற்றம் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியது.

    இதனால் தொழிலாளர்கள் பல நாடுகளில் தங்கள் உரிமைக்காக குரல் எழுப்பி போராட தொடங்கினர். 1923-ம் ஆண்டு மே 1-ந் தேதி பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சென்னையில் மெரினா கடற்கரையில் சிந்தனைசிற்பி சிங்காரவேலர் முதல்முறையாக தொழிலாளர் தினத்தை கொண்டாடினார்.

    இதன் தாக்கம் புதுவையிலும் எதிரொலித்தது. அப்போது புதுவையில் பஞ்சாலை தொழிலாளர்கள்தான் பெருமளவில் இருந்தனர். ஆங்கிலோ பிரெஞ்சு டெக்ஸ்டைல்ஸ், சவானா, கெப்ளே என 3 பஞ்சாலைகள் இயங்கி வந்தது. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.

    இங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் 12 மணி நேர வேலைக்கு நிர்பந்திக்கப்பட்டனர். 1936-ம் ஆண்டு கம்யூனிஸ்டு தொழிற்சங்க தலைவர் வ.சுப்பையா தலைமையில் 8 மணி நேர வேலை உரிமைக்காக பஞ்சாலை தொழிலாளர்கள் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் வலுத்தது.

    போராட்டத்தை அடக்க 1936-ம் ஆண்டு ஜூலை 30-ந்தேதி பிரெஞ்சு அரசு துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஆனாலும் போராட்டம் தொடர்ந்தது.

    இதனால் 1937 ஏப்ரல் 6-ந்தேதி பிரெஞ்சு பாராளுமன்றத்தில் தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்காக சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் நகல் புதுவைக்கு கிடைத்தது. அது பிரெஞ்சு மொழியில் இருந்ததால் மொழி பெயர்ப்பு செய்து, தமிழிலில் பாரதிதாசன் வெளியிட்டார். தொழிலாளர்கள் உயிரை இழந்து 8 மணி நேர வேலை உரிமையை பெற்றுத் தந்த போராட்டத்தின் நினைவாக மே தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

    இன்று 138-வது மே தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. புதுவையிலும் அனைத்து தொழிற்சங்கத்தினரும் கொடியேற்றி தொழிலாளர்களுக்கு இனிப்பு, சீருடை, நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.

    Next Story
    ×