என் மலர்
புதுச்சேரி

ஒரே நாளில் லாபம் தருவதாக கூறி புதுச்சேரியை சேர்ந்த 326 பேரிடம் ரூ.2½ கோடி மோசடி
- ஒரே நாளில் லாபத்துடன் பணம் திரும்பி கிடைப்பதால் கூலி வேலை செய்பவர்கள் கூட இதில் முதலீடு செய்தனர்.
- சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுச்சேரி, வில்லியனுார் சேர்ந்தவர் பிரியதர்ஷினி. ஆன்லைனில் வேலை தேடினார். அப்போது, அவரது மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர் 'டோல்' என்ற ஐரோப்பிய ஏற்றுமதி வியாபார நிறுவனத்தின் வேலை வாய்ப்பு அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அமெரிக்கா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பழங்கள், காய்கறி ஏற்றுமதி செய்யும் இந்நிறுவனம், இந்தியாவில் கிளைகளை தொடங்கி உள்ளது. இதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என, கூறி வாட்ஸ் ஆப் மூலம் டெலிகிராம் லிங்க் அனுப்பினார்.
அதன் பின்னர் டெலிகிராமில் இதற்கென தனி குரூப் உருவாக்கி, அனைவரின் வங்கி கணக்கு விபரங்களை பெற்றுள்ளனர். பிரியதர்ஷினி தனது நண்பர்கள் 4 பேரை அந்த குழுவில் சேர்த்துள்ளார். புதிய நபர்களை அறிமுகப்படுத்தியதிற்காக பிரியதர்ஷினிக்கு சிறிய தொகை அனுப்பட்டது.
அதன் பின்பு ஒவ்வொரு புதிய நபரும் இணையும்போது பிரியதர்ஷினிக்கு 110 ரூபாய் அறிமுக போனஸ் தொகையாக வழங்கி உள்ளனர்.
இந்த தகவலை கேள்விப்பட்டு முதலியார்பேட்டை, நயினார்மண் டபம், நோணாங்குப்பம், அரியாங்குப்பம், தவளக் குப்பம் உள்ளிட்ட பல பகுதியை சேர்ந்த பலர் ரூ. 550 முதல் ரூ.5 லட்சம் வரை செலுத்தினர்.
ஒரே நாளில் லாபத்துடன் பணம் திரும்பி கிடைப்பதால் கூலி வேலை செய்பவர்கள் கூட இதில் முதலீடு செய்தனர். அந்த குழுவில் 326 பேர் உறுப்பினராக சேர்ந்து ரூ. 2 ½ கோடி ரூபாய் செலுத்தி உள்ளனர்.
ஆனால் ஒரே நாளில் பணத்தை திருப்பி தருவதாக கூறிய அந்த மர்ம நபர் அதன் பிறகு தொடர்பை துண்டித்து கொண்டார். இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்து ஏமாற்றப்பட்டவர்கள் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், கீர்த்தி ஆகியோர் விசாரணை நடத்தினர். டோல் என்ற சைபர் கிரைம் ஆசாமிகள் இந்தியா முழுவதும் இது போன்று ஏமாற்றி இருப்பது தெரியவந்தது.
நிறுவனத்தின் பெயரில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து இணைய வழி தொடர்புகள் அமெரிக்காவில் இருந்து செயல்பட்டதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






