search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆந்திரா மாநில பூங்காவிற்கு புதுச்சேரியில் தயாராகும் 100 சிற்பங்கள்
    X

    கைவினை கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள சிற்பங்கள்.

    ஆந்திரா மாநில பூங்காவிற்கு புதுச்சேரியில் தயாராகும் 100 சிற்பங்கள்

    • முழுக்க முழுக்க உள்ளூர் கலைஞர்களை கொண்டு சிமெண்டு கலவை, பிளாஸ்டா பாரீஸ் மூலம் புலி, மான்,பாம்பு, மயில், பறவை சிற்பங்கள் உருவாக்கப்படுகிறது.
    • பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை பார்த்தும், வாங்கியும் செல்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை முருங்கம்பாக்கத்தில் உள்ள கலை மற்றும் கைவினை கிராமத்தில் உள்ளூர் கலைஞர்களின் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் அரங்குகள் அமைத்து கைவினை பொருட்கள் உருவாக்கப்படுகிறது.

    இங்கு சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் தனி அரங்கு உள்ளது. இங்கு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகளின் சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

    அழிந்து வரும் காடுகள், வனவிலங்குகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும், மீட்கும் முயற்சியாக சிற்பங்கள் உருவாக்கப்பட்டு அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.

    முழுக்க முழுக்க உள்ளூர் கலைஞர்களை கொண்டு சிமெண்டு கலவை, பிளாஸ்டா பாரீஸ் மூலம் புலி, மான், பாம்பு, மயில், பறவை சிற்பங்கள் உருவாக்கப்படுகிறது. இவை புதுவைக்கு வருகிற சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை பார்த்தும், வாங்கியும் செல்கின்றனர். மேலும் தங்கள் வீடுகளிலும், நிறுவனங்களிலும் சிற்பங்கள் அமைக்க தேவையான சிற்பங்களை ஆர்டர் கொடுத்தும் செல்கின்றனர்.

    இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த ஆர்டர்கள் மட்டுமே கிடைத்த நிலையில் தற்போது விலங்கு மற்றும் பறவை சிற்பங்களுக்கு ஆர்டர்கள் குவிந்துள்ளன. இதனால் இரவு பகலுமாக கலைஞர்கள் ஆர்வத்துடன் சிற்பங்களை செய்து வருகின்றனர்.

    மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து மிருகங்களின் சிலைகளையும் அரங்கில் அமைக்க ஏற்பாடும் செய்யப்பட்டு வருகின்றது. இங்கு உருவான விலங்குகளின் சிலைகள் ஜார்க்கண்ட், கர்நாடகா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    தற்போது பறவை, விலங்குகள் என 100 சிற்பங்கள் தயாராகி வருகிறது. இவை ஆந்திரா மாநிலத்தின் உள்ள நகர்வனம் பூங்காவில் வைக்கப்பட உள்ளது. இதேபோல் பிற மாநில பூங்காக்களுக்கும் புதுவையில் தயாராகும் சிற்பங்கள் செல்ல உள்ளது.

    முருகப்பாக்கம் கைவினை கிராமத்துக்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த வனவிலங்குகளின் சிலைகள் முன்பு நின்று செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்தும், வாங்கியும் செல்கின்றனர்.

    Next Story
    ×