search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி
    X
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி

    44 ஆண்டு கால கனவு நனவானது: முதல் முறையாக உலகக்கோப்பையை முத்தமிட்டது இங்கிலாந்து

    உலகக்கோப்பை எட்டாக்கணியாக இருந்த இங்கிலாந்துக்கு 44 ஆண்டுகள் கழித்து நேற்றிரவு கனவு நிறைவேறியுள்ளது.
    கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு. அந்த விளையாட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து ஒருமுறை கூட உலகக் கோப்பையை வெல்லவில்லை என்ற ஆதங்கம் இருந்தது. 44 ஆண்டு கால இங்கிலாந்தின் உலகக் கோப்பை கனவு நேற்று நனவானது.

    3 தடவை இறுதிப்போட்டியில் தோற்று சாம்பியன் வாய்ப்பை இழந்த அந்த அணிக்கு இந்தமுறைதான் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

    1975-ம் ஆண்டு உலகக்கோப்பை இங்கிலாந்தில் அறிமுகமானது. இந்தப் போட்டி உருவாவதற்கு காரணமாக அந்த நாடு அறிமுக போட்டியில் அரை இறுதியில் தோல்வியை தழுவியது.

    2-வது உலகக்கோப்பையும் இங்கிலாந்தே நடத்தியது. இந்த முறை இறுதிப்போட்டிக்கு நுழைந்தது. வெஸ்ட் இண்டீசிடம் 92 ரன்னில் தோற்று கோப்பையை இழந்தது. 3-வது போட்டித் தொடரையும் அந்த நாடே நடத்தியது. இதில் அரை இறுதியோடு இங்கிலாந்தின் கதை முடிந்தது.

    இங்கிலாந்து கேப்டன் மோர்கன்

    4-வது உலகக்கோப்பை இங்கிலாந்துக்கு வெளியே இந்தியாவில் முதல் முறையாக நடந்தது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்து 7 ரன்னில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று 2-வது முறையாக கோப்பையை இழந்தது.

    ஆஸ்திரேலியாவில் நடந்த 5-வது உலக கோப்பையிலும் அந்த அணி சிறப்பாக விளையாடியது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் 22 ரன்னில் தோற்று 3-வது முறையாக கோப்பையை இழந்தது.

    1999-ம் ஆண்டு இங்கிலாந்து மீண்டும் உலக கோப்பையை 16 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தியது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. முதல் சுற்றிலேயே வெளியேறியது. அதன்பிறகு நடந்த போட்டிகளிலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

    கடந்த முறை நடந்த போட்டியில் அந்த அணி முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக வெளியேறியது.

    20 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையை இங்கிலாந்து 5-வது முறையாக நடத்தியது. இந்தப் போட்டித் தொடருக்காக அந்த அணி கடந்த 4 ஆண்டுகளாக தீவிர முயற்சி மேற்கொண்டு சிறந்த வீரர்களை தயார்படுத்தியது.

    கடந்த 2 ஆண்டுகளாக அந்த அணி மிகவும் அபாரமாக விளையாடி எல்லா அணிகளையும் வீழ்த்தி முத்திரை பதித்தது. இதனால் போட்டி தொடங்குவதற்கு முன்பே இங்கிலாந்துக்குதான் உலகக் கோப்பை வாய்ப்பு என்று வல்லுனர்கள் கணித்து இருந்தனர்.

    அதற்கு ஏற்றவாறு மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 27 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. இறுதிப் போட்டியில் ஆடும் இங்கிலாந்து முதல் முறையாக கோப்பையை வெல்லுமா? 2-வது முறையாக இறுதி ஆட்டத்தில் விளையாடும் நியூசிலாந்தை முதல் தடவையாக சாம்பியன் பட்டம் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி

    லண்டன் லார்ட்ஸ மைதானத்தில் நடந்த இந்தப் போட்டி அனைத்து எதிர்பார்ர்பையும் தாண்டி அதிகமான பரபரப்பை ஏற்படுத்தியது. இறுதிப் போட்டியும், அதைத் தொடர்ந்து சூப்பர் ஓவரும் ‘டை’ ஆனது. இதனால் அதிக பவுண்டரிகள் அடித்த கணக்கில் இங்கிலாந்து முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.

    பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என 3 துறைகயிலும் சிறப்பாக செயல்பட்ட அந்த அணி உலக கோப்பையை வெல்ல முழு தகுதியானது. அதே நேரத்தில் அந்த அணிக்கு இறுதிப் போட்டியில் அதிர்ஷ்டமும் கிடைத்தது.

    கிரிக்கெட்டை அனைத்து வகையிலும் முன்னேற்றப்பாதைக்கு அழைத்து செல்லும் இங்கிலாந்து முதல் முறையாக உலக கோப்பையை வென்றதன் மூலம் தனது கனவை நனவாக்கி கொண்டது.
    Next Story
    ×