search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இலங்கை அதிபர் தேர்தலில் பலத்த போட்டி- ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெறுவாரா?
    X

    இலங்கை அதிபர் தேர்தலில் பலத்த போட்டி- ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெறுவாரா?

    • 225 உறுப்பினர் இலங்கை பாராளுமன்றத்தில் ஆளும் இலங்கை மக்கள் கட்சியின் ஆதிக்கம்தான் உள்ளது.
    • இலங்கை அதிபர் தேர்தலில் பல தலைவர்கள் களமிறங்கி இருப்பதால் பலத்த போட்டி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

    கொழும்பு:

    இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட மக்கள் புரட்சியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் சிங்கப்பூருக்கு தப்பி சென்று விட்டார்.

    எனவே இலங்கையின் இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று முன்தினம் பதவியேற்றார்.

    கோத்தபய ராஜபக்சே ராஜினாமாவை தொடர்ந்து நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 20-ந்தேதி பாராளுமன்றத்தில் நடக்கிறது. 19-ந்தேதி வேட்புமனு பெறப்படுகின்றன.

    இந்த தேர்தலில் போட்டியிட தற்போதைய இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே திட்டமிட்டு உள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ஒரே எம்.பி.யான அவரை ஆதரிக்க கோத்தபய ராஜபக்சேவின் இலங்கை மக்கள் கட்சி முன்வந்திருக்கிறது.

    225 உறுப்பினர் இலங்கை பாராளுமன்றத்தில் ஆளும் இலங்கை மக்கள் கட்சியின் ஆதிக்கம்தான் உள்ளது. ஆனால் ரணிலை ஆதரிப்பதற்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

    தங்கள் கட்சி சாராத ஒருவரை ஆதரிக்கக்கூடாது என அந்த கட்சித்தலைவர் ஜி.எல்.பெய்ரீஸ் கூறியுள்ளார். இலங்கை மக்கள் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவரும், முன்னாள் மந்திரியுமான டல்லஸ் அழகப்பெருமாவை ஆதரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார். இவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை ஏற்கனவே உறுதி செய்துள்ளார்.

    இதற்கிடையே இலங்கையின் பிரதான எதிர்க்கட்சித்தலைவரான சஜித் பிரேமதாசாவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக நேற்று அறிவித்தார். இதைப்போல மற்றொரு எதிர்க்கட்சியும், நாட்டின் மிகப்பெரிய இடதுசாரி கட்சியுமான ஜெ.வி.பி. தலைவர் அனுர குமார திசநாயகேவும் தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.

    இவர்களை தவிர முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் நாட்டின் உயரிய பொறுப்பை வசப்படுத்த களமிறங்கலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும் அவரது கட்சித்தலைவரான சஜித் பிரேமதாசா போட்டியில் இருந்து விலகினால் மட்டுமே அவர் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.

    இவ்வாறு இலங்கை அதிபர் தேர்தலில் பல தலைவர்கள் களமிறங்கி இருப்பதால் பலத்த போட்டி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

    Next Story
    ×