search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ரஷியாவுடன் போர்- உக்ரைனுக்கு கொத்துகுண்டுகளை வழங்க அமெரிக்கா முடிவு
    X

    ரஷியாவுடன் போர்- உக்ரைனுக்கு கொத்துகுண்டுகளை வழங்க அமெரிக்கா முடிவு

    • ரஷிய படைக்கு எதிராக உக்ரைன் ராணுவம் கடும் சவால் அளித்து வருகிறது.
    • மோசமான பாதிப்பு, உயிரிழப்புகள் ஏற்படும். கொத்து குண்டுகள் 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 500-வது நாளை தொட்டது. ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் ரஷிய படைக்கு எதிராக உக்ரைன் ராணுவம் கடும் சவால் அளித்து வருகிறது. இருந்த போதிலும் உக்ரைனின் சில நகரங்களை ரஷியா கைப்பற்றியது.

    உக்ரைனுக்கு அமெரிக்கா, ஏவுகணைகளை அழிக்கும் அமைப்பு ராக்கெட் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களை வழங்கி உள்ளது. இதற்கிடையே கிளஸ்டர் எனப்படும் கொத்துகுண்டுகளை வழங்குமாறு அமெரிக்க அதிபர் ஜோபைடனிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார். இந்த நிலையில் மிக ஆபத்தான கிளஸ்டர் குண்டுகளை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்து உள்ளது.

    இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறும் போது, 'கொத்து குண்டுகளின் ஆபத்து காரணமாகவே உக்ரைனுக்கு அவற்றை அளிப்பது தாமதப்படுத்தப்பட்டது. ஆனால் உக்ரைனில் ஆயுத பற்றாக்குறை நிலவ அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது. உக்ரைனுக்கு அனுப்பப்படும் அமெரிக்க கொத்து குண்டுகள், ரஷியாவால் போரில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளைவிட மிகவும் பாதுகாப்பானவை' என்றார்.

    கொத்து குண்டு என்பது ஒரு பெரிய குண்டுக்குள் பல சிறிய குண்டுகள் இருக்கும். ஏவுகணை, பீரங்கி அல்லது விமானத்தில் இருந்து அந்த குண்டு வீசப்படும். அந்த பெரிய குண்டு இலக்கில் வெடித்த பின் அதில் இருந்து பல சிறிய குண்டுகள் வெடித்து சிதறும். இது ஒரே இலக்கின் பரந்த பகுதியை தாக்கும் தன்மை உடையவை.

    இதனால் மோசமான பாதிப்பு, உயிரிழப்புகள் ஏற்படும். கொத்து குண்டுகள் 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.

    இதுபோன்ற ஆயுதங்கள் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்ற ஐ.நா. உடன்படிக்கையில் 100 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. ஆனால் சில சந்தர்ப்பங்களில் இதுபோன்ற குண்டுகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதாக கூறி அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட சில நாடுகள் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாக ரோவா கூறும் போது, 'உக்ரைனுக்கு கிளஸ்டர் வெடி குண்டுகளை வழங்கும் அமெரிக்கர்களின் முடிவு விரக்தியின் செயல். இது உக்ரைனில் எதிர்தாக்குதலில் ஏற்பட்ட தோல்வியையும் பலவீனத்தையும் காட்டுகிறது' என்றார்.

    Next Story
    ×